ஏர்டெல், வோடபோன், ஜியோ தனியார் செல்போன் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்தது


ஏர்டெல், வோடபோன், ஜியோ தனியார் செல்போன் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்தது
x
தினத்தந்தி 3 Dec 2019 3:15 AM IST (Updated: 3 Dec 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் துறை செல்போன் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஜியோவின் கட்டண உயர்வு 6-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் இயங்கி வரும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய 3 நிறுவனங்களும் முன்னணியில் இருக்கின்றன. இந்தியாவின் மொத்த செல்போன் வாடிக்கையாளர்களில் பெரும்பகுதியினர் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாகவே உள்ளனர்.

இந்த நிறுவனங்கள் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டில் செல்போன் கட்டணங்களை உயர்த்தி இருந்தன. இந்த நிறுவனங்கள் தங்களுக்கு இடையேயான போட்டியை சமாளிக்க ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக செல்போன் இணையதள கட்டணங்கள் மிகவும் மலிவாக்கப்பட்டு உள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு ஒரு ஜி.பி. டேட்டாவின் விலை ரூ.269 ஆக இருந்தது. ஆனால் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின் இந்த விலை மிகவும் மலிவாக்கப்பட்டது. அந்தவகையில் கடந்த ஆண்டில் ஒரு ஜி.பி. டேட்டாவின் விலை ரூ.11.78 என்ற அளவிலேயே இருந்தது.

இத்தகைய சலுகைகளால் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளன. மேலும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக பெரும் கடன் சுமையும் ஏற்பட்டு உள்ளன.

எனவே இவற்றை சமாளிக்க செல்போன் சேவை (அழைப்பு மற்றும் டேட்டா) கட்டணத்தை 50 சதவீதம் வரை மேற்படி நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இது தொடர்பாக பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வரம்பில்லா (அன்லிமிடெட்) பிரிவில் புதிய கட்டண அட்டவணையை இந்த நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளன.

இதில் வோடபோனை பொறுத்தவரை நாள்தோறும் 1½ ஜி.பி. டேட்டா, 365 நாள் (செல்லுபடியாகும் காலம்) திட்டத்துக்கான கட்டணம் ரூ.1699-ல் இருந்து ரூ.2,399 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த அடிப்படையில் குறுகிய கால திட்டங்களுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளன.

பார்தி ஏர்டெல்லை பொறுத்தவரை 1½ ஜி.பி. தினசரி டேட்டாவுடன் 365 நாள் காலத்துக்கான திட்டத்துக்கு ரூ.1,699 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்த கட்டணம் ரூ.2,398 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல குறுகிய கால திட்டங்களின் கட்டணமும் அதிகரித்து உள்ளன.

வரம்பில்லா இலவச அழைப்புகளை வழங்கி வந்த நிறுவனங்கள், தற்போது இலவச அழைப்புகளுக்கு உச்சபட்ச வரையறை நிர்ணயித்து உள்ளன. அதன்படி 28 நாட்கள் திட்டத்துக்கு 1000 நிமிடங்களும், 84 நாட்கள் திட்டத்துக்கு 3 ஆயிரம் நிமிடங்களும், 365 நாட்கள் திட்டத்துக்கு 12 ஆயிரம் நிமிடங்களும் அளிக்கப்பட்டு உள்ளன. இந்த எல்லையை கடந்து அழைக்கப்படும் குரல் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 6 காசு வீதம் வசூலிக்கப்படும்.

இவற்றை தவிர வோடபோன் மற்றும் ஏர்டெல் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் அழைப்பு மற்றும் இணையதள பயன்பாட்டுக்கு குறைந்தபட்ச ரீசார்ஜும் செய்ய வேண்டும். அந்தவகையில் குறைந்தபட்சம் ரூ.49-க்கு (4 வாரங்கள் செல்லுபடியாகும்) ரீசார்ஜ் செய்திருந்தால் மட்டுமே அழைப்பு மற்றும் டேட்டாவை பயன்படுத்த முடியும்.

இந்த கட்டண உயர்வு மற்றும் சேவைகள் அனைத்தும் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

இதைப்போல ரிலையன்ஸ் ஜியோவும் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை உயர்த்துகிறது. குறிப்பாக ஆல்-இன்-ஒன் திட்டத்தின் கட்டணத்தை 40 சதவீதம் வரை உயர்த்த ஜியோ முடிவு செய்து உள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 6-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தனியார் செல்போன் நிறுவனங்களின் இந்த கட்டண உயர்வு அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story