உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. புதிய மனு


உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. புதிய மனு
x
தினத்தந்தி 4 Dec 2019 6:01 AM GMT (Updated: 4 Dec 2019 11:56 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் நேற்று மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந் தேதி வெளியிட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் நேற்று மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011-ம் ஆண்டுக்கு பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதனால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந்தேதி அறிவித்தது. ஆனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடந்த 2-ந் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின்னர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட வேண்டும். மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு கடந்த வாரம் தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் திடீரென புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறையிலான ஒதுக்கீடு ஆகிய சட்ட நடைமுறைகளை மேற்கொண்டு உடனடியாக தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இதே கோரிக்கையுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உமாபதி உள்ளிட்ட 6 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.



Next Story