பாலியல் வன்கொடுமை: புகார் கொடுத்த சிறுமியை 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்த ஜாமீனில் வந்த குற்றவாளி
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறை சென்றவன், ஜாமினில் வெளிவந்து சிறுமியை கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஜபல்பூர்
ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக விவாதங்கள் நடந்தன. பாலியல் குற்றவாளிகளை அடித்துக்கொல்ல வேண்டும் என்று சில பெண் எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். இந்த நிலையில், பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்குவது ஆபத்தாக மாறும் வகையில் மத்தியப்பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 16 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவக்குமார் (வயது 19) என்பவர் கைதானார். கடந்த 10 நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்த அவர், தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த பெண் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், பெண்ணின் நடவடிக்கையை தினமும் கண்காணித்த சிவக்குமார், பெண்ணின் பெற்றோர் வெளியே சென்ற நிலையில், வீட்டுக்குள் புகுந்த அவர், அங்கு தனியாக இருந்த பெண்ணை கத்தியால் சரமாறியாக குத்தி கொலை செய்துள்ளார். அலறல் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கே வர, அங்கிருந்து சிவக்குமார் தப்பிச் செல்ல முயன்றுள்ளான்.
எனினும், கத்தியுடன் இருந்தவனை அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இளம் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் பெண்ணின் உடலில் 30 இடங்களில் கத்தி குத்து காயம் இருந்ததாக கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story