என்னை தூக்கிச்சென்று பாஜகவில் சேர்த்தனர்; காங்கிரஸ் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு
என்னை தூக்கிச்சென்று பா.ஜ.க.வில் சேர வைத்தனர் என காங்கிரசில் மீண்டும் இணைந்த நிர்வாகி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில், 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் 14 மாதங்களே நீடித்த குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களின் உதவியை பெற்று சட்டவிரோதமான ஆட்சியை பா.ஜனதா அமைத்தது. காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களையும், மாயாவதி உத்தரவை மீறிய என்.மகேஷ் எம்.எல்.ஏ.வையும் பா.ஜனதா விலைக்கு வாங்கியது என குற்றச்சாட்டை கூறினார். பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டது. ஆனால் அதனை அக்கட்சி மறுத்து வந்தது.
இந்நிலையில், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகியான ஆர். வசந்தகுமார் கடந்த 2 நாட்களுக்கு முன் பா.ஜ.க.வில் இணைந்து விட்டார் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அவர் மீண்டும் காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், பா.ஜ.க. தலைவர்கள் என்னை முதல் அமைச்சர் இல்லத்திற்கு தூக்கிக்கொண்டு போய், திடீரென அக்கட்சியில் இணைத்து விட்டனர் என குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவருடன் இருந்த காங்கிரசின் மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ் பேசும்பொழுது, பா.ஜ.க. என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அவர்களது தலைவர்கள் மீதே அவர்களுக்கு எந்த நம்பிக்கையுமில்லை. அவர்கள் எங்களுடைய தலைவர்களை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் எங்கள் கட்சியின் ஆர். வசந்தகுமாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால் அவர் மீண்டும் எங்களிடமே திரும்பி வந்து விட்டார். இதுபோன்ற ஆள்கடத்தல் செயலில் ஈடுபடுவதை பா.ஜ.க. நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story