9 மாவட்டங்கள் நீங்கலாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


9 மாவட்டங்கள் நீங்கலாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Dec 2019 5:44 AM GMT (Updated: 6 Dec 2019 11:07 PM GMT)

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை வார்டுகள் மறுவரையறை செய்து நடத்த வேண்டும் என்று கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததால், அந்த கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று கடந்த 2-ந்தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யவேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை, சுழற்சிமுறை இடஒதுக்கீடு பணிகள் முடிந்த பின்னர் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக மேலும் சிலரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த அனைத்து மனுக்களும் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்களை உருவாக்கியதன் அடிப்படையில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும், மேற்கண்ட 9 மாவட்டங்களில் புதிதாக வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவை நிறைவடைந்த பிறகு அந்த மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த 9 மாவட்டங்களை தவிர தமிழ்நாடு முழுவதும் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்துவது குறித்த புதிய அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த தடை விதித்தும், மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்த அனுமதி வழங்கியும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தலாம். அதற்கு சட்ட ரீதியான தடை எதுவும் இல்லை.

தமிழக அரசு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆகியவை சட்டவிதிமுறைகளின் அடிப்படையில் இந்த 9 மாவட்டங்களிலும் 4 மாதங்களுக்குள் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றில் வார்டு மறுவரையறை பணிகளை முழுமையாக செய்து முடிக்க வேண்டும்.

9 மாவட்டங்களை தவிர்த்து மீதி உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துகளில் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவை ஏற்று தேர்தல் நடத்துவதாக ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு பஞ்சாயத்துகள் (தொகுதி இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறை) சட்டம் 1995-ன் அடிப்படையில் அனைத்து மட்டத்திலும் அனைத்து நிலையிலும் சரியான விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மூல வழக்கில் 2001-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் அல்லாது 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்போது வார்டு மறுவரையறை செய்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளதால், மூல வழக்கில் விடுக்கப்பட்ட கோரிக்கை தற்போது செயலிழந்து விட்டது. எனவே மூல வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இதேபோல் மற்ற அனைத்து இடைக்கால மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.


Next Story