ஜார்கண்ட் மாநிலத்தில் 2-ம் கட்ட தேர்தலில் 63 சதவீதம் ஓட்டுப்பதிவு - துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி


ஜார்கண்ட் மாநிலத்தில் 2-ம் கட்ட தேர்தலில் 63 சதவீதம் ஓட்டுப்பதிவு - துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
x
தினத்தந்தி 7 Dec 2019 10:30 PM GMT (Updated: 7 Dec 2019 8:58 PM GMT)

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற 2-ம் கட்ட சட்டமன்ற தேர்தலில் 63.36 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தேர்தலின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

ராஞ்சி,

81 சட்டசபை தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் 64.12 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்தநிலையில் அங்கு 2-ம் கட்டமாக 20 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 2-ம் கட்ட தேர்தலில், 29 பெண்கள் உள்பட 260 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்-மந்திரி ரகுபர் தாஸ் (ஜாம்ஜெட்பூர் கிழக்கு), சபாநாயகர் தினேஷ் ஓரான் (சிசாய்), ஊரக வளர்ச்சித்துறை மந்திரி நீல்காந்த் சிங் முண்டா (குந்தி) மற்றும் பா.ஜனதா மாநில பிரிவு தலைவர் லட்சுமண் கிலுவா (சக்ராதர்பூர்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்கள்.

தேர்தலுக்காக 6,066 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில், 762 வாக்குச்சாவடிகள் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் இருந்தன. இதனால் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 18 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு முடிவடைந்தது. ஆனால் முதல்-மந்திரி ரகுபர்தாஸ் போட்டியிடும் ஜாம்ஜெட்பூர் (மேற்கு) மற்றும் ஜாம்ஜெட்பூர் (கிழக்கு) ஆகிய தொகுதிகளில் மட்டும் 3 மணிக்கு பிறகும், வாக்காளர்கள் ஏராளமானோர் வரிசையில் இருந்ததால் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. அமைதியான முறையில் நடந்து முடிந்த இந்த தேர்தலில் 63.36 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு சில இடங்களில் மட்டும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. சிசாய் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படை போலீசாரின் ஆயுதங்களை சிலர் பறிக்க முயன்றனர். அவர்கள் மீது அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

இதைக்கண்டித்து கிராம மக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் போலீஸ்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவத்தால் அந்த மையத்தில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சாய்பசா தொகுதியில் ஆளில்லாத பஸ்சை நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்தனர்.

ஜார்கண்ட் சட்டசபைக்கு 3-ம் கட்ட தேர்தல் வருகிற 12-ந்தேதியும், 4-ம் கட்ட தேர்தல் 16-ந்தேதியும், 5 மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 20-ந்தேதியும் நடைபெற உள்ளது.

5 கட்ட தேர்தல்களும் முடிந்தபிறகு 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Next Story