குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - மோடி மகிழ்ச்சி


குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - மோடி மகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 Dec 2019 12:46 AM IST (Updated: 10 Dec 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது குறித்து மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் நேற்று குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கேள்வி நேரத்துக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து பேசினார். பிற்பகலில் மசோதா மீதான விவாதம் தொடங்கியது.

அதில் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா இயற்றப்படவில்லை என்று அமித் ஷா தெரிவித்தார். ஒன்பது மணிநேரதிற்கு மேல் நீடித்த விவாதத்திற்கு பிறகு இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.  மசோதாவின் பிரிவுகளில் எதிர்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

பின்னர் மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80  உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக  நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில், “விரிவான விவாதத்திற்குப் பிறகு, குடியுரிமை (திருத்த) மசோதா, 2019-ஐ மக்களவையில் நிறைவேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. மசோதாவை ஆதரித்த பல்வேறு எம்.பி.க்கள் மற்றும் கட்சிகளுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த மசோதா இந்தியாவின் பல  நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. மேலும் மனிதாபிமானங்களுக்கு மதிப்பளிக்கிறது.

குடியுரிமை (திருத்த) மசோதா, 2019 இன் அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்கியதற்காக உள்துறை மந்திரிஅமித்ஷாவை நான் சிறப்பாகப் பாராட்ட விரும்புகிறேன். மக்களவையில் நடந்த விவாதத்தின் போது அந்தந்த எம்.பி.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் விரிவான பதில்களை அளித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story