பால்தாக்கரே நினைவுச்சின்னம் அமைக்க மரங்களை வெட்டக் கூடாது - உத்தவ் தாக்கரே உத்தரவு


பால்தாக்கரே நினைவுச்சின்னம் அமைக்க மரங்களை வெட்டக் கூடாது - உத்தவ் தாக்கரே உத்தரவு
x
தினத்தந்தி 10 Dec 2019 6:40 AM IST (Updated: 10 Dec 2019 6:40 AM IST)
t-max-icont-min-icon

பால்தாக்கரே நினைவுச்சின்னம் அமைக்க மரங்களை வெட்டக் கூடாது என்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

மும்பை,

அவுரங்காபாத்தில் உள்ள பிரியதர்ஷின் பூங்காவில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு நினைவு சின்னம் கட்டப்பட உள்ளது. இதற்காக அந்த பூங்காவில் உள்ள 1,000 மரங்கள் வெட்டப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. 

இதில் சிவசேனாவை முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் காட்டமாக சாடினார்.மரங்கள் வெட்டபடும் விவகாரத்தில் சிவசேனா வெளிவேஷம் போடுவதாகவும், தங்களது தேவைக்காக மரங்களை வெட்ட அனுமதிப்பது மன்னிக்க முடியாத பாவம் என்றும் விமர்சித்து இருந்தார்.

இந்தநிலையில், பால்தாக்கரே நினைவு சின்னம் அமைக்கும் பணிக்காக பிரியதர்ஷினி பூங்காவில் மரங்களை வெட்டக் கூடாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.

இதுபற்றி அவுரங்காபாத்தை சேர்ந்த சிவசேனா முன்னாள் எம்.பி. சந்திரகாந்த் கைரே கூறியதாவது:- பிரியதர்ஷினி பூங்காவில் பால்தாக்கரே நினைவுச் சின்னம் அமைவது பிடிக்காத சிலர் அங்குள்ள மரங்கள் வெட்டப்படுவதாக வதந்தியை பரப்பி உள்ளனர்.

இந்த திட்டம் தொடர்பாக இதுவரை அவுரங்காபாத் மாநகராட்சி டெண்டரோ அல்லது பணி ஆணையோ வழங்கவில்லை. பால்தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர்கள்.

இந்த பூங்காவில் பால்தாக்கரே நினைவு சின்னத்திற்காக சிவசேனா மரங்களை ஒருபோதும் வெட்டாது. எந்த மரத்தையும் வெட்டக் கூடாது என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் எங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.இதை மேயருக்கும் நாங்கள் தெரிவித்து விட்டோம். மரங்கள் வெட்டப்படாமல் பால்தாக்கரே நினைவு சின்னம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story