குடியுரிமைச் சட்டம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் கருத்துக்கு இந்திய அரசு பதில்


குடியுரிமைச் சட்டம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் கருத்துக்கு இந்திய அரசு பதில்
x
தினத்தந்தி 10 Dec 2019 5:34 PM IST (Updated: 10 Dec 2019 5:34 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமைச் சட்டம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் கருத்து துல்லியமாகவோ, உத்தரவாதமாகவோ இல்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது விரைவில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) கூறியுள்ளதாவது;-

“இந்த குடியுரிமை சட்டம் என்பது முற்றிலும் தவறானதாகும். ஒருவரின் மதத்தை பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. இந்த சட்டம் இந்தியாவின் மதசார்பற்ற வளமான வரலாறு மற்றும்  அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை துல்லியமாகவோ, உத்தரவாதமாகவோ இல்லை. குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவு ஆகிய இரண்டும் இந்தியாவை விட்டு யாரையும் வெளியே அனுப்பாது.

குடியுரிமை சட்டம் பிற நாடுகளில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு அடைக்கலம் தரக்கூடியது. அவர்களுக்கான இந்திய குடியுரிமையை உறுதி செய்வது. இது போன்ற முயற்சியை வரவேற்க வேண்டும். மத சுதந்திரம் என்ற பெயரில் குறை சொல்லக் கூடாது. 

அமெரிக்க ஆணையம் எங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது வியப்பளிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் கடந்த காலங்களில் இப்படித்தான் செயல்பட்டு வந்து இருக்கிறார்கள். இந்த சட்டம்  குறித்த தெளிவு இல்லாமல் அமெரிக்க ஆணையம் பாரபட்சமான கருத்துக்களை கூறி வருவது மிகவும் வருந்தத்தக்கது” என்று தெரிவித்துள்ளது.

Next Story