மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கல் - நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்


மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கல் - நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
x
தினத்தந்தி 10 Dec 2019 11:30 PM GMT (Updated: 10 Dec 2019 9:55 PM GMT)

மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. இதை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

புதுடெல்லி,

வட கிழக்கு மாநிலங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள மசோதா, குடியுரிமை திருத்த மசோதா ஆகும்.

நாடாளுமன்ற மக்களவையில், ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள நிலையில், இந்த மசோதா நேற்று முன்தினம் அங்கு தாக்கல் செய்யப்பட்டு எளிதாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் விழுந்தன.

இந்த மசோதா இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இங்கு இந்த மசோதா மீதான விவாதத்தின்போது அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் மக்களவையை போன்று இந்த மசோதா மாநிலங்களவையில் எளிதாக நிறைவேறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனாலும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையின் தற்போதைய பலம் 238 ஆகும். 238 பேரும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்கிறபோது 120 ஓட்டுகள் விழுந்தால்தான் மசோதா நிறைவேறும்.

இதில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு மொத்தம் 105 உறுப்பினர்கள் உள்ளனர். (பாரதீய ஜனதா-83, ஐக்கிய ஜனதாதளம்-6, சிரோமணி அகாலிதளம்-3, லோக்ஜனசக்தி-1, இந்திய குடியரசு கட்சி (அத்வாலே)-1, நியமன உறுப்பினர்கள்-11).

11 இடங்களை கொண்டுள்ள அ.தி.மு.க., 7 உறுப்பினர்களை கொண்டிருக்கிற பிஜூஜனதாதளம், தலா 2 இடங்களை பெற்றிருக்கிற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளுடன் ஆளும் பாரதீய ஜனதா கட்சி பேச்சு நடத்தி வருகிறது.

இந்த கட்சிகள் ஏற்கனவே குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் ஆதரித்து ஓட்டு போட்டுள்ளன. எனவே மாநிலங்களவையிலும் ஆதரித்து ஓட்டு போடும் என பாரதீய ஜனதா கட்சி எதிர்பார்க்கிறது.

127 ஓட்டுகளை பெற்று விட முடியும் என்று ஆளும் பாரதீய ஜனதா கட்சி நம்புகிறது. எனவே குடியுரிமை திருத்த மசோதா, மாநிலங்களவையிலும் இன்று நிறைவேறுவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


Next Story