புறநகர் ரெயில்களில் கழிப்பிட வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் கடும் அவதி - நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு


புறநகர் ரெயில்களில் கழிப்பிட வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் கடும் அவதி - நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 12 Dec 2019 2:15 AM IST (Updated: 12 Dec 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

புறநகர் ரெயில்களில் கழிப்பிட வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் கடும் அவதியடைந்து வருவதாக நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் எம்.பி. பேசினார்.

புதுடெல்லி,

சென்னை மத்திய தொகுதி தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் நேற்று பேசியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கரமான திட்டம் ‘ஸ்வச் பாரத்’ (தூய்மை இந்தியா). திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத பகுதிகளாக நமது நாடு 100 சதவீதம் மாறிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆனால் பிரதமரின் கூற்றுக்கும், தூய்மை இந்தியா திட்டத்துக்கும் முற்றிலும் முரண்பட்டதாக ரெயில்வே அமைச்சகம் செயல்படுகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சுமார் 120 ரெயில் நிலையங்கள் உள்ளன. அங்கு ஒரு கழிப்பிட வசதி கூட இல்லை என்று ரெயில்வே மந்திரிக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.

செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு 2 மணி நேரம் பயண நேரம் ஆகும். இதேபோல திருவொற்றியூரில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வருவதற்கு 1½ மணி நேரம் ஆகிறது. ஏராளமான கர்ப்பிணி பெண்கள் ரெயில்களில் பயணம் செய்கிறார்கள். புறநகர் ரெயில்களில் கழிப்பிட வசதி இல்லாததால், அவர்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

2014-ம் ஆண்டு முதல் நீங்கள் தான் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்பதால், முந்தைய காங்கிரஸ் அரசை குறை கூறமுடியாது. ரெயில்வே மந்திரிக்கு நான் இதுதொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறேன். தயவுசெய்து பதில் கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story