தேசிய செய்திகள்

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது: ஆதரவு -125; எதிர்ப்பு -105 + "||" + The Citizenship Amendment Bill was passed in the states amid bitter opposition: Support -125; Resistance -105

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது: ஆதரவு -125; எதிர்ப்பு -105

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது: ஆதரவு -125; எதிர்ப்பு -105
மக்களவையை போன்று கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 பேரும், எதிராக 105 பேரும் வாக்களித்தனர்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமை திருத்த மசோதா கடந்த 9-ந் தேதி நள்ளிரவில் நிறைவேறியது.

இந்த மசோதா, மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.


இப்படி குடியேறியவர்களில் பெரும்பாலோர் வட கிழக்கு மாநிலங்களில் குடியேறியதால், அங்கு இந்த மசோதாவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களவையிலும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாவை உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த மசோதா, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்தியர்களாக இருந்தனர், இந்தியர்களுக்காக இருக்கின்றனர், இந்தியர்களாக தொடருவர். அவர்களுக்கு எதிராக பாகுபாடு இல்லை.

இந்த மசோதா முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்கும். இந்திய முஸ்லிம்கள் இந்த மசோதாவினால் கவலைப்பட தேவை இல்லை. உங்களை (முஸ்லிம்களை) யாரும் பயமுறுத்த முயற்சித்தால், பயப்படாதீர்கள். இது நரேந்திர மோடி அரசு. இது அரசியல் சாசனத்தின்படி செயல்படுகிறது. சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும்.

பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவிய முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க அரசு விரும்பவில்லை.

பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? வங்காளதேசத்தில் இருந்து வந்த முஸ்லிம்கள் இந்திய குடிமக்கள் ஆக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம்கள் இந்திய குடிமக்கள் ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உலகமெங்கும் இருந்து வந்துள்ள முஸ்லிம்களுக்கு நாம் குடியுரிமை கொடுக்க வேண்டுமா? இப்படி நாம் நாட்டை எப்படி வழிநடத்த முடியும்?

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பல்லாண்டு காலம் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களுக்கு நாம் புதியதொரு வாழ்க்கையை அளிக்க வேண்டிய தேவை உள்ளது.

இந்த மசோதாவை இங்கே சிலர் அரசியலாக்க முயற்சி செய்கின்றனர். அதை செய்யாதீர்கள். நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவதுதான் மசோதாவின் நோக்கம். இந்திய மக்கள் எங்களுக்கு, எங்கள் தேர்தல் அறிக்கைக்கு வாக்கு அளித்து முழுமையான பெரும்பான்மையை அளித்திருக்கிறார்கள்.

இந்த மசோதா வரம்புக்குள் கிட்டத்தட்ட வட கிழக்கு மாநிலங்கள் அனைத்தும் வராது என்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மக்களவையில் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மசோதா தாக்கலின் போது அசாம் மக்களின் நலன் பாதுகாக்கப்படுவதாக அமித் ஷா கூறியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து சபை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவின்படி மாநிலங்களவை டெலிவிஷன் நேரடி ஒளிபரப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடர்ந்தது.

விவாதத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா பேசினார்.

அப்போது அவர், “அரசியல் காரணங்களுக்காக மசோதாவை எதிர்க்கவில்லை; அரசியல் சாசனம் மற்றும் தார்மீக காரணங்களால் எதிர்க்கிறேன். அரசியல் சாசன சோதனையில் இந்த மசோதா தவறி இருக்கிறது. இந்த மசோதா அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல். இது பிளவுபடுத்தக்கூடியது, பாரபட்சமானது என்பதால் இந்தியாவின் ஆன்மாவை காயப்படுத்துகிறது” என கூறினார்.

தொடர்ந்து பேசிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜே.பி.நட்டா, குடியுரிமை திருத்த மசோதா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா என பாராட்டு தெரிவித்தார். இது தேசிய நலனின் அடிப்படையில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசப்பிரிவினை மத அடிப்படையில் அமைந்தது என்பது உண்மை; எனவேதான் இந்தியாவில் இந்துக்களும், பாகிஸ்தானில் முஸ்லிம்களும் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர், பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினர். அதில் கேள்விக்கு இடமில்லை என்றும் ஜே.பி. நட்டா பேசும்போது கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசும்போது, குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்ற முகத்தின் மீது விழுந்த அறை என சாடினார். அவர் தொடர்ந்து பேசும்போது, “இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தெரிந்தும்கூட, இந்துத்துவா செயல் திட்டத்தை முன்னே எடுத்துச்செல்வதற்காக இந்த மசோதா மூலம் அரசு பரபரப்பை ஏற்படுத்துகிறதோ என பயப்படுகிறேன். இது ஒரு வேதனையான நாள். அவர்கள் அரசியல் சாசனத்தை திருத்தவில்லை என்பதற்காக நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அவர்கள் சட்டத்தைத்தான் இயற்றுகிறார்கள். நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த சட்டம் (நீதிமன்றத்தில்) ரத்து செய்யப்பட்டு விடும்” என்று கூறினார்.

மேலும், இலங்கையில் இருந்து வந்துள்ள இந்துக்களையும், பூடானில் இருந்து வந்துள்ள கிறிஸ்தவர்களையும் குடியுரிமை திருத்த சட்ட வரம்பின் கீழ் கொண்டு வராதது ஏன் என அவர் கேள்வியும் எழுப்பினார்.

இதே கேள்வியை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தும் (காங்கிரஸ்) கேட்டது குறிப்பிடத்தக்கது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தீரக் ஓ பிரையனும், இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறினார். இந்த மசோதாவுக்கு எதிராக மக்கள் இயக்கம் உருவாகும் என எச்சரித்த அவர், சுப்ரீம் கோர்ட்டிலும் எதிர்த்து வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார்.

சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜாவத் அலி கான், இந்த உத்தேச சட்டத்தின்மூலம் பாரதீய ஜனதா கட்சி, முகமது அலி ஜின்னா கண்ட கனவை நிறைவேற்றுகிறது என்று கூறினார்.

மசோதாவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி., டி.கே. ரங்கராஜன் பேசும்போது, இந்த மசோதா சட்ட விரோதமானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எங்கள் கட்சி மசோதாவை எதிர்க்கிறது என கூறினார்.

திருச்சி சிவா (தி.மு.க.) பேசும்போது, இந்த மசோதாவை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தார். மேலும், “இந்த மசோதா சுப்ரீம் கோர்ட்டு பரிசீலனையின் முன் நிற்காது. இது மிகவும் பிளவுகளை ஏற்படுத்தும்; நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டார்.

மசோதாவை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி கே.ஜே. அல்போன்ஸ் (பா.ஜனதா) பேசுகையில், பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த் பேசுகையில், தனது கட்சி மசோதாவை ஆதரிப்பதாக கூறினார். இருப்பினும் மசோதா வரம்புக்குள் இலங்கை தமிழ் அகதிகளையும் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விவாதத்துக்கு பதில் அளித்து உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார்.

அவர் பேசுகையில், கடந்த காலத்தில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அவரது பதில் உரைக்கு பின், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

இறுதியில் மசோதாவின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 125 ஓட்டுகளும், எதிராக 105 ஓட்டுகளும் கிடைத்தன. பாரதீய ஜனதா, ஐக்கிய ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் மற்றும் அ.தி.மு.க., பிஜூ ஜனதாதளம், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பெரும்பாலான எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால், மசோதா எளிதாக நிறைவேறியது.

சிவசேனா எம்.பி.க்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இனி இந்த மசோதா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் கையெழுத்து போட்டு ஒப்புதல் அளித்ததும் சட்டமாகி அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்து விடும்.


தொடர்புடைய செய்திகள்

1. புயல் வீசிய மாநிலங்களவை!
நாடாளுமன்றத்தில், மாநில சட்டசபைகளில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் உறுப்பினர்கள் மாநிலங்களவையை அலங்கரிப்பார்கள். மாநிலங்களவையை “ஹவுஸ் ஆப் எல்டர்ஸ்”, அதாவது “மூத்தவர்கள் அவை” என்று கூறுவது வழக்கம்.
2. சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்
சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
3. மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் ஒருவாரம் சஸ்பெண்ட்
மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
4. ராணுவத்தில் 16 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா பாதிப்பு
ராணுவத்தில் 16 ஆயிரத்து 758-பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. கடும் எதிர்ப்பு கிளம்பியதால் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை
கடும் எதிர்ப்பு காரணமாக புதுவையில் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை.