அம்மை நோய்க்கு தடுப்பூசி போடாத குழந்தைகள் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா


அம்மை நோய்க்கு தடுப்பூசி போடாத குழந்தைகள் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா
x
தினத்தந்தி 12 Dec 2019 10:28 AM GMT (Updated: 2019-12-12T16:38:27+05:30)

அம்மை நோய்க்கு தடுப்பூசி போடாத 23 லட்ச குழந்தைகளின் எண்ணிக்கையுடன் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

புதுடெல்லி

2018 ஆம் ஆண்டில், அம்மை நோயால் உலகளவில் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டதாகவும் இதில்  1,42,000  பேர் மரணம் அடைந்ததாகவும்  டிசம்பர் 6 அன்று வெளியிடப்பட்ட  உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பிடப்பட்ட பாதிப்புகள் மற்றும் இறப்புகள் உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் நிறுவனங்களுக்கு அறிக்கை செய்ததை விட அதிகமாக உள்ளது. 2018 ல் பதிவான அம்மை நோய்களின் எண்ணிக்கை 3,53,000 மட்டுமே.

இரண்டு தடுப்பூசி மூலம் தட்டம்மை நோயை தடுக்கலாம் . ஆனால் அம்மை நோய்க்கு தடுப்பூசி போடாத குழந்தைகளின் எண்ணிக்கை ஆறு நாடுகளில் ஆபத்தான வகையில் உள்ளது.

நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு வாராந்திர அறிக்கையில் (எம்.எம்.டபிள்யூ.ஆர்) கூறப்பட்டு உள்ளதாவது:-

உலக அளவில் 23 லட்ச அம்மை நோய்க்கு தடுப்பூசி போடாத குழந்தைகளின் எண்ணிக்கையை கொண்டு இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நைஜீரியா 24 லட்சம் குழந்தைகளுடன்  முதல் இடத்தில் உள்ளது. 

பாகிஸ்தான் (14 லட்சம்), எத்தியோப்பியா (13 லட்சம்), இந்தோனேசியா (12 லட்சம்) மற்றும் பிலிப்பைன்ஸ் (70 ஆயிரம் ) ஆகியவை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைக் கொண்ட மற்ற நான்கு நாடுகளாகும் என கூறபட்டு உள்ளது.

2017 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஒரு வயதிற்குட்பட்ட 29  லட்சம்  குழந்தைகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்படவில்லை என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில், இந்தியாவில்   தடுப்பூசி போடாத  குழந்தைகளின் எண்ணிக்கை 29 லட்சத்தில் இருந்து  23 லட்சமாக குறைந்துள்ளது.

நைஜீரியாவின் விஷயத்தில் குறைப்பு மிக அதிகமாக உள்ளது - 2017 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 40 லட்சம் குழந்தைகளிலிருந்து 2018 இல் 24 லட்சமாக குறைந்து உள்ளது.

2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட 70,000 அம்மை நோய் பாதிப்பு குழந்தைகள் இருந்தன, இது உலகின் மூன்றாவது அதிகமாகும். 2019 ஆம் ஆண்டில், 29,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இத்தகைய அதிகரிப்பை தடுக்க  இரண்டு  தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டு 95 சதவீத  பாதுகாப்பை உறுதி செய்ய உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது  தடுப்பூசி பாதுகாப்பு 2000 ஆம் ஆண்டிலிருந்து உலகளவில் அதிகரித்துள்ள போதிலும், இன்னும்  95 சதவீத பாதுகாப்பை  எங்கும் எட்டவில்லை.

2018 ஆம் ஆண்டில், உலகளவில் 86 சதவீத  குழந்தைகள் மட்டுமே வழக்கமான நோய்த்தடுப்பூசியை பெற்றனர். இரண்டாவது தடுப்பூசியை பொறுத்தவரை, உலகளவில் போடப்படுவது வெறும் 69 சதவீதம் மட்டுமே.

இந்தியாவில், அம்மை தடுப்பூசியின் முதல் டோஸ் ஒன்பது -12 மாத வயதில் வழங்கப்படுகிறது, இரண்டாவது டோஸ் 16-24 மாத வயதில் தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.  லட்சக்கணக்கான  குழந்தைகளுக்கு வழக்கமான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அம்மை தடுப்பூசி கிடைப்பதில்லை என்று தெரிகிறது.

Next Story