கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் நாடாளுமன்றத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்   நாடாளுமன்றத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 12 Dec 2019 11:27 PM GMT (Updated: 2019-12-13T05:31:35+05:30)

மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்.

புதுடெல்லி,

டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை நிலவும் மாநிலமாகும். தமிழகம் தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களை சேர்ந்த 5 கோடி பேர் குடிநீருக்காக காவிரியையே நம்பியுள்ளனர்.

கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் மொத்தம் ரூ.65,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று கடந்த ஆண்டு அப்போதைய மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்காரி கூறியிருந்தார். அதைக்கேட்டு தமிழக மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். இந்த திட்டத்தை மீண்டும் ஒருமுறை அதிகாரபூர்வமாக அறிவித்து, விரைவாக செயல்படுத்தி முடிக்க வேண்டும்.

இந்த திட்டம் குறித்து விவாதிப்பதற்காக இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கூட்டத்தை பிரதமர் தலைமையில் கூட்டி விவாதிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளையும் தேசியமயமாக்க வேண்டும். இதன் மூலம் நதிகள் இணைப்பு சாத்தியமாவதுடன், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகள் அனைத்தும் நிரந்தரமாக தீர்க்கப்படும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

அங்கு விவசாயம் மட்டுமே செய்யப்பட்டால் தான் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாத்து, அடுத்து வரும் தலைமுறைகளுக்கு விட்டு செல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story