போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர தேசிய விசாரணை முகமையின் ஐ.ஜி. அசாமுக்கு மாற்றம்


போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர தேசிய விசாரணை முகமையின் ஐ.ஜி. அசாமுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 13 Dec 2019 5:53 AM GMT (Updated: 2019-12-13T13:28:04+05:30)

போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர தேசிய விசாரணை முகமையின் ஐ.ஜி. அசாமுக்கு மாற்றம் செய்யப்பட்டு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

குடியுரிமை திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கண்டித்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அசாமில் போராட்டம் வன்முறையாகவெடித்ததையடுத்து தேசிய விசாரணை முகமையின் ஐ.ஜி. ஜி.பி. சிங்கை அங்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.

1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜி.பி.சிங் புதன் இரவு அசாமுக்கு அனுப்பப்பட்டார். இவர் அசாமில் உல்பா தீவிரவாதிகளை ஒடுக்கியத்தில் முக்கிய பங்காற்றியவர் ஆவார். மத்திய அரசின் மூலம் சொந்தப் பாதுகாப்பு பெற்ற சில உயரதிகாரிகளில் சிங்கும் ஒருவர். 

இவருக்கு எப்போதும் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்து கொண்டேயிருப்பார்கள். பல்வேறு தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் விசாரணையாளராகவும், கண்காணிப்பாளராகவும் இவர் இருந்து வந்த நிலையில் தற்போது அசாமுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி.பி.சிங்கின் பதவிக்காலம் நவம்பர் 2020-உடன் முடிவடைகிறது. அசாமில் போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜி.பி.சிங்கை அங்கு விரைய உத்தரவிட்டார். 

ஜி.பி.சிங்  இந்த உத்தரவை பெறும் போது தனது இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள மூத்த உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இது குறித்து கூறும்போது, அசாம் நிலைமைகளை மத்திய அரசு  உன்னிப்பாக கவனித்து  வருகிறது. இணையதள சேவையை முடக்க வேண்டும் என்ற உளவுத்துறை தகவல்களை அடுத்தே மாநில அரசினால் முடிவு எடுக்கப்பட்டது என கூறினார்.

Next Story