டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் -சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அதிருப்தி


டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்  -சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அதிருப்தி
x
தினத்தந்தி 16 Dec 2019 6:08 AM GMT (Updated: 16 Dec 2019 7:54 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நின்றால் மட்டுமே வழக்கை விசாரிப்போம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறி உள்ளார்.

புதுடெல்லி,

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று பல்கலைக்கழக வளாகம் அருகே ஒன்று கூடினர். அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூர்யா ஓட்டல் முன்பு பேரிகார்டுகள் வைத்து போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தியதால், போராட்டக்கார்கள் மாதா மந்திர் சாலை வழியாக ஜந்தர் மந்தருக்கு செல்ல முயன்றனர்.

அப்போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றதால் போராட்டம் வெடித்தது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, இரண்டு பேருந்துகளுக்கும் தீ  வைக்கப்பட்டன. மேலும், இரண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்  நடத்தப்பட்டது.

போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க பல்கலைக்கழக வளாகத்திற்குள் தஞ்சம் புகுந்த போராட்டக்கார்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது,  போராட்டக்காரர்களுடன் சேர்ந்து பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர்களையும் போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வகுப்பறைகளை போலீசார் சேதப்படுத்தி விட்டதாக மாணவர்கள் வீடியோ வெளியிட்டனர்.

இந்த பல்கலைக்கழக வளாகம் தனியாக இல்லை. இதன் இரு புறமும் சாலை அமைந்துள்ளது. போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது அவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்துவிட்டனர். அங்கிருந்தபடி கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பல்கலைக்கழகத்திற்குள் சென்று சோதனையிட்டோம், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்று போலீசார் கூறுகின்றனர்.

காவல்துறை தடியடி மற்றும் போராட்டக்கார்கள் கல்வீச்சு சம்பவத்தால் 35 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக  மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் இரவில் காவல்துறை தலைமை  அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா கரத், ஜமியத் உலாமா இ    இந்து அமைப்பின் நிர்வாகி மகமுத் மதானி உள்ளிட்டோர் நள்ளிரவில் போராட்டக்களத்திற்கு வந்து மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள தென்கிழக்கு டெல்லியில் அசாதாரண சூழல் நிலவியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்கார்கள் ஒன்று கூடுவதை தடுக்க வசந்த விஹார், ஆர்.கே.புரம் உள்ளிட்ட 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள கதவுகள் மூடப்பட்டுள்ளன. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பாஜகவினரே போலீசாரை பயன்படுத்தி பேருந்துகளுக்கு தீ வைத்துள்ளதாக மாநில துணை முதலமைச்சர் மணீஸ் சிஷோடியா குற்றம்சாட்டியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழக வளாகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் நள்ளிரவில் அசாதாரண சூழல் நிலவியது.

டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக போராட்டக்காரர்கள் மீது 2 வழக்குகளை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது.

டெல்லி ஜாமியா பல்கலை கழக போராட்டம் குறித்து தாமாக முன்வந்து  விசாரிக்க வேண்டும் எனவும் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது, சில மாணவர்களை காணவில்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டில்  வக்கீல் இந்திரா ஜெயசிங் என்பவர் முறையிட்டார்.

இது குறித்து சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி பாப்டே,  போராட்டங்களை நிறுத்தி அமைதி காத்தால் மனுக்களை விசாரிக்கிறோம். பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. போராட்டம் என்ற பெயரில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்த அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை. போராட்டங்களில் காயமடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறை உள்ளது. முதலில் அங்கு அமைதி நிலவட்டும். யார் கலவரம் செய்தனர், யார் அமைதியாக போராடினர் என்பதை நாங்கள் இப்போது சொல்ல முடியாது என கூறினார்.

டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகளை நாளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்து உள்ளது.

Next Story