டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரியங்கா காந்தி திடீர் போராட்டம் - 2 மணி நேரம் தரையில் அமர்ந்து ‘தர்ணா’


டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரியங்கா காந்தி திடீர் போராட்டம் - 2 மணி நேரம் தரையில் அமர்ந்து ‘தர்ணா’
x
தினத்தந்தி 16 Dec 2019 11:44 AM GMT (Updated: 16 Dec 2019 10:01 PM GMT)

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, ‘இந்தியா கேட்’ முன்பு நேற்று திடீரென்று பிரியங்கா காந்தி 2 மணி நேரம் தரையில் அமர்ந்து ‘தர்ணா’ போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதுடெல்லி,

குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்காளத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து நேற்று முன்தினம் தீவிர போராட்டத்தில் குதித்தனர். போலீசார் இதை கட்டுப்படுத்த முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அரசு பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இதில் ஏராளமான மாணவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று மாலை 4 மணி அளவில் டெல்லியில் உள்ள ‘இந்தியா கேட்’ பகுதிக்கு சென்று குளிரையும் பொருட்படுத்தாமல் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கும், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது பிரியங்கா, “இளம் மாணவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்” என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி இருந்தார்.

பின்னர் பிரியங்கா பேசுகையில் கூறியதாவது:-

ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது? என்பதற்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும். யாருடைய அரசாங்கம் மாணவர்களை தாக்கியது? என்று விளக்கம் அளிக்க வேண்டும். இந்த அரசாங்கம் அரசியலமைப்பை தாக்கி உள்ளது. இது தேசத்தின் ஆன்மா மீதான தாக்குதல் ஆகும்.

சட்டத்தை எதிர்ப்பது மாணவர்களின் உரிமை. அவர்களுக்காக நான் போராடுவேன். நானும் ஒரு தாய். பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து மாணவர்களை வெளியே இழுத்து எறிந்தது மிக கொடுமையானது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகள் மீது இந்த அரசாங்கம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. மற்றதையெல்லாம் பற்றி பேசும் பிரதமர், அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ., சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தது பற்றி ஏன் பேசவில்லை? இந்த அரசாங்கத்துக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தர்ணா போராட்டம் மாலை 6 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது. பிரியங்கா காந்தியே நேரடியாக போராட்டத்தில் குதித்ததால் காங்கிரஸ் தொண்டர்களும், ஏராளமான மாணவர்களும் ‘இந்தியா கேட்’ பகுதியை நோக்கி திரளாக சென்றனர். இதைத்தொடர்ந்து ஏராளமான போலீசார் ‘இந்தியா கேட்’டை சுற்றியுள்ள ரோடுகளில் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்காரர்களை தடுத்தனர். மேலும் அருகில் உள்ள 4 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.

இந்த போராட்டம் காரணமாக டெல்லியில் நேற்று மாலை போக்குவரத்து கடுமையான பாதிக்கப்பட்டது.

Next Story