டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறை சம்பவம்: சமூக விரோத சக்திகளுக்கு தொடர்பு -உள்துறை அமைச்சகம் விளக்கம்


டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறை சம்பவம்: சமூக விரோத சக்திகளுக்கு தொடர்பு -உள்துறை அமைச்சகம் விளக்கம்
x
தினத்தந்தி 17 Dec 2019 6:31 AM GMT (Updated: 2019-12-17T12:01:03+05:30)

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறை சம்பவத்தில் சமூக விரோத சக்திகளுக்கு தொடர்பு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ஒரு கும்பல் சில பஸ்களுக்கு தீ வைத்தது. இதனால் போலீசார் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின்றி போலீசார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தும் தடியடி நடத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் காயம் அடைந்தனர்.

போலீசாரின் இந்த அத்துமீறல்களை கண்டித்தும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரியும் நேற்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாலைக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். மாணவிகளும் இதில் பங்கேற்றனர்.

இதனிடையே  டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 10 பேரும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்றும் மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி ஜாமியா பல்கலை. வன்முறையின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு ஏதும் நடத்தவில்லை என்றும் வன்முறையில் சமூக விரோத சக்திகளுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Next Story