குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை -டெல்லி ஜும்மா மசூதி இமாம் கருத்து
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை திருத்த சட்டம் வகை செய்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையது அகமது புகாரி கூறியிருப்பதாவது:-
போராட்டம் நடத்துவது இந்திய மக்களின் ஜனநாயக உரிமை. இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், போராட்டங்களின் போது கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டியது முக்கியம். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் வித்தியாசம் உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டமாகி உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, இன்னும் சட்டமாகவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள முஸ்லிம்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காது. இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு இமாம் சையது அகமது புகாரி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story