இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை; மத்திய அரசு பரிசீலனை


இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை; மத்திய அரசு பரிசீலனை
x
தினத்தந்தி 22 Dec 2019 2:12 AM GMT (Updated: 22 Dec 2019 2:25 AM GMT)

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது பற்றி பரிசீலனை மேற்கொள்ளப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமியிடம் மத்திய மந்திரி அமித்ஷா உறுதியளித்து உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் போராட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தின.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக எந்த வகையில் போராட்டத்தை முன்னெடுத்து செல்லலாம் என்பது குறித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமீபத்தில் நடைபெற்றது.  இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் நாளை பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான தேசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது பற்றி கோரிக்கை விடுத்துள்ளார்.  தமிழக அரசின் கோரிக்கை மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்து உள்ளார் என அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் போராட்டங்களால் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிப்பு இல்லை.  நாளை தி.மு.க. நடத்தவுள்ள போராட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்..

Next Story