விஜய் மல்லையாவின் சொத்துகளை வங்கிகள் பயன்படுத்தலாம் - மும்பை கோர்ட்டு


விஜய் மல்லையாவின் சொத்துகளை வங்கிகள் பயன்படுத்தலாம் - மும்பை கோர்ட்டு
x
தினத்தந்தி 1 Jan 2020 11:02 AM GMT (Updated: 1 Jan 2020 11:02 AM GMT)

விஜய் மல்லையாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை பயன்படுத்திக் கொள்ள மும்பை கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

மும்பை,

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் விஜய் மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 

இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார்.  அவரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5ல், பணமோசடி தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு கோர்ட்டு அறிவித்தது. விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.

விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்கிய வங்கிகள், 2013லிருந்து அவர் வழங்க வேண்டிய 11.5 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.6.203.35 கோடியை திரும்ப பெற, அவரது சொத்துகளை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு ஒன்றினால், பறிமுதல் செய்யப்பட்ட, விஜய் மல்லையாவின் சொத்துகளை கலைப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என பணமோசடி தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீது மும்பை கோர்ட்டு  இன்று உத்தரவிட்டது. அதன்படி, விஜய் மல்லையாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வங்கிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட தரப்பினர், வரும் 18-ம் தேதிக்குள் மும்பை கோர்ட்டில்  மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story