கேட் வே ஆப் இந்தியாவில் ‘சுதந்திர காஷ்மீர்' என்ற பதாகையுடன் போராட்டத்தில் பங்கேற்ற பெண் மீது வழக்குப்பதிவு


கேட் வே ஆப் இந்தியாவில்  ‘சுதந்திர காஷ்மீர் என்ற பதாகையுடன் போராட்டத்தில் பங்கேற்ற பெண் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 8 Jan 2020 8:57 AM IST (Updated: 8 Jan 2020 8:57 AM IST)
t-max-icont-min-icon

மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதியில் ‘சுதந்திர காஷ்மீர்' என்ற பதாகையுடன் மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மும்பை ‘கேட்வே ஆப் இந்தியா’வில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் ‘சுதந்திர காஷ்மீர்' என்ற பதாகையுடன் பங்கு பெற்றார்.  மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

சுதந்திர காஷ்மீர் என்ற பதாகையுடன் போராட்டத்தில் கலந்துகொண்டது எழுத்தாளர் மேகக் மிர்சா பிரபு என்பது தெரியவந்தது. அவர் மன்னிப்பு கேட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “கடந்த 5 மாதங்களாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நம்முடையவர்கள் என்று நாங்கள் சொன்னால், அதற்கேற்ப நாம் அவர்களை நடத்த வேண்டும். நாம் பெறும் அடிப்படை உரிமைகளை அவர்கள் பெற வேண்டும். 

அவர்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கவேண்டும். அந்த சிந்தனையுடன் தான் பதாகையை ஏந்தியிருந்தேன். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது என்னை ஒரு அமைப்பின் உறுப்பினர் என கூறுவது எனக்கு புரியவில்லை” என்று கூறினார்.ஆனால், மேகக் மிர்சா பிரபுவின் பின்புலம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், தேசவிரோத செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறினார். இந்தநிலையில் போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story