தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை கோரி வழக்கு; மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை கோரி வழக்கு; மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 Jan 2020 4:26 AM IST (Updated: 10 Jan 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டில் எட்வின் வில்சன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு பற்றி தேசிய பசுமை தீர்ப்பாயம் தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் தேர்தல் ஆணையர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாக கூறியிருந்தாலும் தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேனர்கள் மற்றும் ‘பிளக்ஸ் போர்டு’களின் பயன்பாடு குறித்து கண்காணிப்பது தொடர்பாக எதுவும் கூறவில்லை.

வேட்பாளர்களை சார்ந்தவர்களும், கட்சித்தொண்டர்களும் தேர்தல் முடிந்ததும் இந்த பேனர்களையும், இதர பிளாஸ்டிக் பொருட்களையும் அப்படியே விட்டு செல்கின்றனர். இதுபோன்ற தவறான பயன்பாடுகள் தான் சுற்றுச்சூழலுக்கு பெரிதும் மாசு விளைவிப்பவை. எனவே, தேர்தல் பிரசாரத்தின்போது பிளாஸ்டிக் பொருட்கள், பேனர்கள், ‘பிளக்ஸ் போர்டு’கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பதில் அளிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். 

Next Story