மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை தீபிகா படுகோனேக்கு பா.ஜனதா கண்டனம்


மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை தீபிகா படுகோனேக்கு பா.ஜனதா கண்டனம்
x
தினத்தந்தி 10 Jan 2020 9:14 PM GMT (Updated: 10 Jan 2020 9:14 PM GMT)

ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை தீபிகா படுகோனேக்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பை,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் (ஜே.என்.யூ.) முகமூடி அணிந்து நுழைந்த நபர்கள், அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்திற்கு சென்ற நடிகை தீபிகா படுகோனே அங்கு நடந்த மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். இதனால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது.

இந்தநிலையில் மராட்டிய பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆசிஸ் செலார் கூறியதாவது:-

சஞ்சய் லீலா பன்சாலி போன்ற இயக்குனர் உங்கள் பின்னால் இருக்கும்போது, வீரமிக்க போர் வீராங்கனை மஸ்தானியின் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது. ஆனால் நிஜ வாழ்க்கையில் பின்னால் ஒரு இயக்குனர் இல்லாதபோது, தீபிகா படுகோனே தன்னை ஒரு போர் வீராங்கனை அல்லது மஸ்தானி என்று சித்தரிக்க முயற்சிக்கக்கூடாது. ஏனென்றால் அவரால் அந்த மாதிரியான வாழ்க்கையை உண்மையில் வாழ முடியாது.

ஜே.என்.யூ.வில் தாக்குதலுக்கு ஆளான ஒருசாராரை மட்டும் அவர் நேரில் சென்று சந்தித்து தனது உணர்ச்சியற்ற தன்மையை காட்டியுள்ளார். ஒரு தரப்பினரை மட்டும் சந்தித்ததன் மூலம் அவர் வெளிப்படையாக சிக்கலில் இருக்கிறார். நாங்கள் அவருடைய செயலை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story