மக்களை பிளவுபடுத்துவதே குடியுரிமை சட்டத்தின் நோக்கம்: காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி தாக்கு


மக்களை பிளவுபடுத்துவதே குடியுரிமை சட்டத்தின் நோக்கம்: காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி தாக்கு
x
தினத்தந்தி 11 Jan 2020 1:18 PM GMT (Updated: 11 Jan 2020 9:03 PM GMT)

மக்களை பிளவுபடுத்துவதே குடியுரிமை சட்டத்தின் நோக்கம் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி கூறினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் காரிய கமிட்டி கூட்டம் நேற்று டெல்லியில் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீர் நிலைமை, அமெரிக்கா-ஈரான் பதற்றம் மற்றும் நாட்டில் நிலவும் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மாணவர்கள், இளைஞர்களின் குரலை அரசு ஒடுக்குவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் பாரபட்சமான மற்றும் பிளவுபடுத்தும் சட்டம். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதே இதை கொண்டுவந்ததன் கெட்ட நோக்கம். வடிவம் மற்றும் அதன் உள்ளடக்கத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மற்றொரு வடிவம்தான்.

காங்கிரசின் மூத்த தலைவர்கள் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஒரு தீங்கற்ற நடவடிக்கை என்று எந்த மாயையிலும் இருந்துவிடக்கூடாது.

புதிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தினால் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும், குறிப்பாக மாணவர்களும் உணர்ந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் கடுங்குளிரையும், போலீசாரின் முரட்டுத்தனத்தையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவது குறித்தும் விசாரணை நடத்த ஒருங்கிணைந்த உயர்மட்ட கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும்.

மாணவர்கள் போராட்டம் ஒரு வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால்தான் அரசு இதில் பிடிவாதமாக இருப்பது தெளிவாகிறது. தினமும் உள்துறை மந்திரி, சில நாட்களில் பிரதமரே கூட ஆத்திரமூட்டும் அறிக்கைகள் வெளியிடாமல் இருந்ததில்லை. சில மாநிலங்களில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. உத்தரபிரதேசம், டெல்லி போன்ற சில மாநிலங்களில் போலீசாரின் நடவடிக்கைகள் அத்துமீறி உள்ளன.

பொருளாதார வீழ்ச்சியால் அனைத்து பிரிவு மக்களும் சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கான திறமையோ, விருப்பமோ மத்திய அரசுக்கு இல்லை என்றே எனக்கு தெரிகிறது.

காஷ்மீரில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. அங்கு இயல்புநிலை திரும்பிவிட்டது, சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று அரசு கூறிவருவது கேலிக்குரியதாக உள்ளது. இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால், ஜோதிராதித்யா சிந்தியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story