காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் தீவிர கண்காணிப்பு; பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என தகவல்
காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பயங்கரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், தீவிர கண்காணிப்பை நீடிக்க ராணுவம் முடிவு செய்து உள்ளது.
ஜம்மு.
காஷ்மீர் மாநிலத்தில் தினமும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நீடித்தது. அங்குள்ள பிரிவினைவாதிகளும், சில அரசியல்வாதிகளும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்தனர்.
இதனை ஒடுக்கும் வகையில் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அன்று மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. முன்னதாக பிரிவினைவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது சொத்துகள் முடக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதற்குப்பின்னர் காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. உயிர் சேதங்கள் தடுக்கப்பட்டது. இருந்தாலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டுள்ள பயங்கரவாதிகளும், ராணுவத்தினரும் சிறிய ரக பீரங்கிகளால் சுடுகின்றனர். இந்திய ராணுவமும் உடனுக்குடன் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
கடந்த மாதம் (டிசம்பர்) 20-ந் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து காஷ்மீரின் தாங்கதார், நீலம், கன்சல்வான் இந்திய நிலைகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதில் 2 இந்திய வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் பலியானார்கள். பலர் படுகாயம் அடந்தனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதன் காரணமாக சர்வதேச நிதி நடவடிக்கை குழுவின் (எப்.ஏ.டி.எப்.), சாம்பல் நிற பட்டியலில் பாகிஸ்தான் உள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் வருகிற காலத்திலும் அட்டூழியத்தில் ஈடுபடலாம் என்று மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவலாம் என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் காஷ்மீரில் ராணுவ பாதுகாப்பு தொடந்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள உள்ளது. தற்போது அங்கு 850 துணை ராணுவ கம்பெனிகள் (85 ஆயிரம் வீரர்கள்) முகாமிட்டு இருந்தனர். அவர்களில் 100 கம்பெனிகள் திரும்ப பெறப்பட்டது. மேலும் 50 கம்பெனிகள் வாபஸ் பெறப்படவும் உள்ளது. மீதம் 700 கம்பெனிகள் (70 ஆயிரம் வீரர்கள்) அங்கு தொடர்ந்து முகாமிட்டு கண்காணிப்பு பணியை தொடர உள்ளனர்.
சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் உள்ள வேலி பழைய முள்கம்பிகள் துருப்பிடித்து காணப்படுவதால் அவற்றை மாற்றி புதிய முள்கம்பிகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லை பகுதியில் 60 கிலோ மீட்டர் தூரம் சுருள் முள்கம்பிகள் பொறுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதேபோல அசாம் மாநிலம் சில்சார் பகுதி எல்லையில் அமைக்கப்பட்ட 7 கிலோ மீட்டர் தூர வேலி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சுருள் முள்கம்பி வேலி அமைப்பதற்கு ரூ.2 கோடி செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story