இந்தியா பாரம்பரிய சுற்றுலா மையமாக உருவாக வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு


இந்தியா பாரம்பரிய சுற்றுலா மையமாக உருவாக வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
x
தினத்தந்தி 11 Jan 2020 11:30 PM GMT (Updated: 11 Jan 2020 8:59 PM GMT)

இந்தியா பாரம்பரிய சுற்றுலா மையமாக உருவாக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கொல்கத்தா,

கொல்கத்தா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று அங்குள்ள அருங்காட்சியகத்தின் பழங்கால நாணய கட்டிடத்தில் நவீன கலை சிற்பம் ஒன்றை திறந்துவைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நாட்டில் உள்ள 5 முக்கிய அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்துடன் மேம்படுத்தப்பட உள்ளது. அது உலகின் மிகவும் பழமையான கொல்கத்தா அருங்காட்சியகத்தில் இருந்து தொடங்குகிறது.

இந்திய பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கவும், மீண்டும் கண்டுபிடிக்கவும், மீண்டும் திட்டமிடவும், மீண்டும் புதுப்பிக்கவும் ஒரு தேசிய திட்டத்தை நாங்கள் இன்று கொல்கத்தாவில் இருந்து தொடங்கியுள்ளோம். இந்தியாவின் கலாசார ஆற்றலை உலகுக்கு முன்னால் வைப்பது மத்திய அரசின் முயற்சியாகும். இதனால் இந்தியா பாரம்பரிய சுற்றுலாவின் முக்கிய மையமாக உருவாகும்.

இங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளவைகளை பார்க்கும்போது, புகழ்பெற்ற ஓவியர்கள், கலைஞர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்வதாக உணருகிறேன். இந்த அருமையான சக்திபடைத்த வங்காள மண்ணை வணங்குகிறேன். இலக்கியம் மற்றும் கலாசார நகரமான கொல்கத்தாவில் இருப்பது எனது மனமும், இதயமும் இன்பம் நிறைந்து இருக்கிறது. என்னை உற்சாகப்படுத்திக்கொள்ள இது எனக்கு கிடைத்த வாய்ப்பு.

இந்தியா பாரம்பரிய சுற்றுலாவுக்கான மையமாக உருவாக வேண்டும் என நான் விரும்புகிறேன். இதில் மேற்குவங்காளமும், கொல்கத்தாவும் முன்னணியில் இருக்கிறது. சுற்றுலா வளர்ந்தால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.

நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை வெளியிட வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. நமது அரசு அவைகளை வெளியிட்டது.

இந்திய சுதந்திரத்துக்கு பிறகு சுதந்திரத்தை பற்றி ஆழமாக ஆராயாமல் எழுதிய வரலாற்று ஆசிரியர்களால் வரலாற்றின் பல முக்கிய அம்சங்கள் கவனிக்கப்படவில்லை.

இந்த புது ஆண்டில் மற்ற வங்காள புரட்சியாளர்களுக்கும் தகுதியான மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டும் என்று நாடு விரும்புகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற அவுரா பாலத்தில் ஒலி, ஒளி காட்சியையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.


Next Story