சபரிமலை ரெயில் திட்டத்தை கிடப்பில் போட்டது ஏன்? - மத்திய அரசு விளக்கம்


சபரிமலை ரெயில் திட்டத்தை கிடப்பில் போட்டது ஏன்? - மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 13 Jan 2020 3:30 AM IST (Updated: 13 Jan 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை ரெயில் திட்டத்தை கிடப்பில் போட்டது ஏன் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

ஆனால் இந்த சபரிமலைக்கு நேரடி ரெயில் சேவை இல்லை.

சபரிமலைக்கு அருகில் உள்ள ரெயில் நிலையங்கள் என்றால், அவை சபரிமலையில் இருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ள கோட்டயம், திருவல்லா, செங்கனூர் ரெயில் நிலையங்கள்தான். எனவே இந்த நகரங்களுக்கு ரெயிலில் பயணம் செய்து, பின்னர் பிற போக்குவரத்து சாதனங்கள் மூலம்தான் சபரிமலை செல்ல முடியும்.

இந்த நிலையில் சபரிமலைக்கு நேரடி ரெயில் சேவை வழங்குவதற்காக 1997-98-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் அங்கமாலி-சபரிமலை ரெயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. 111 கி.மீ. நீளம் கொண்ட இந்த ரெயில் பாதை ரூ.550 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதன் பின்னணி என்ன என்பது குறித்து கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் விளக்கி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சபரிமலை ரெயில் பாதை திட்டத்தின் ஒரு பிரிவாக, அங்கமாலி-காலடி இடையேயும் (7 கி.மீ.), காலடி-பெரும்பாவூர் (10 கி.மீ.) இடையேயும் பாதை அமைக்கும் திட்டம் கையில் எடுக்கப்பட்டது.

ஆனால் ரெயில் பாதை அமைப்பதற்கு நிலம் எடுக்கவும், தடங்களை அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டங்கள் நடத்தியதால் தொடர்ந்து திட்டப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. திட்டத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்குகளும் போடப்பட்டன. மாநில அரசு ஒத்துழைக்கவும் இல்லை.

இது, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் பெருத்த தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி திட்ட செலவு 1997-ம் ஆண்டு ரூ.550 கோடி என மதிப்பிட்டிருந்த நிலையில், 2017-ல் இது ரூ.1,566 கோடி ஆகி உள்ளது. இது திட்ட செலவில் 512 சதவீத உயர்வு ஆகும்.

இதை ரெயில்வே மட்டுமே நிதி ஒதுக்கி செய்து விடுவது சாத்தியம் இல்லாதது. எனவே மாநில அரசு திட்டச்செலவில் குறைந்தது 50 சதவீதத்தை தர வேண்டும் என்று 2011-2012 இடையே கடிதம் எழுதப்பட்டது. இதைத் தர கேரள அரசு 2015-ம் ஆண்டு ஒப்புக்கொண்டது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரே ஆண்டில் அதாவது 2016-ம் ஆண்டு, 50 சதவீத திட்டச்செலவை தருகிற முடிவை கேரள அரசு திரும்ப பெற்று விட்டது. திடீரென எடுக்கப்பட்ட இந்த கொள்கை மாற்றம் வியப்பை அளிக்கிறது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று மறுபடியும் 2017-ம் ஆண்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபரிமலை ரெயில் பாதை திட்டம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டது.

இந்த திட்டத்தை ரெயில்வே நிதியை மட்டுமே கொண்டு நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை. எனவே கேரள மாநிலத்தில் ரெயில்வே மேம்பாட்டுப்பணிகளில் மாநில அரசும் பங்களிப்பு செய்ய வேண்டும். இது உள்ளூர் மக்களுக்கும், பக்தர்களுக்கும் சபரிமலைக்கு செல்வதற்கு ரெயில் சேவை வழங்க உதவியாக இருக்கும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story