பாமாயில் இறக்குமதியை தொடர்ந்து மலேசியா மீது மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா திட்டம்


பாமாயில் இறக்குமதியை தொடர்ந்து மலேசியா மீது மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா திட்டம்
x
தினத்தந்தி 16 Jan 2020 5:25 AM GMT (Updated: 16 Jan 2020 5:25 AM GMT)

பாமாயில் இறக்குமதியை தொடர்ந்து மலேசியா மீது மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அண்மையில் காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இதற்கு இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இறக்குமதி தடையால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாமாயில் 2.8 சதவீதமாக உள்ளது. மொத்த ஏற்றுமதியில் 4.5 சதவீதம் பாமாயில் பங்களிப்பு உள்ளது. 

மலேசியா ஒரு வருடத்தில் 19 மில்லியன் டன் பாமாயிலை உற்பத்தி செய்கிறது, இந்தோனேசியா 43 மில்லியன் டன் பாமாயிலை உற்பத்தி செய்கிறது என்று வர்த்தக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாயன்று மகாதீர் முகமது மலேசிய ஊடகங்களில் பேசும்போது, நாங்கள் நிச்சயமாக கவலைப்படுகிறோம், ஏனென்றால் நாங்கள் நிறைய பாமாயிலை இந்தியாவுக்கு விற்கிறோம், ஆனால் மறுபுறம், நாங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும், ஏதாவது தவறு நடந்தால் அதை நாங்கள் சொல்ல வேண்டும்.

உண்மை என்னவென்றால், இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது அங்குள்ள மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மற்றவர்களிடம் பாகுபாடு காண்பது தவறு என்று முழு உலகமும் உணர்கிறது என கூறினார்.

இதைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான வர்த்தக கட்டுப்பாடுகளை கடுமையாக்க இந்தியா மேலும் முயன்று வருகிறது.

நுண்செயலிகளுக்கு தொழில்நுட்ப தரங்களை விதிக்கவும் மேலும் தொலைத் தொடர்பு சாதனங்களுக்கான தரக் கட்டுப்பாட்டு உத்தரவையும்  அமல்படுத்துகிறது. தரக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்குவதை உறுதி செய்ய சுங்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

Next Story