மூன்று இந்து சிறுமிகள் கடத்தல் : பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்


மூன்று இந்து சிறுமிகள் கடத்தல் : பாகிஸ்தான் தூதரக  அதிகாரிக்கு இந்தியா சம்மன்
x
தினத்தந்தி 18 Jan 2020 6:06 AM GMT (Updated: 2020-01-18T11:36:19+05:30)

மூன்று இந்து சிறுமிகளைக் கடத்தியது தொடர்பாக பாகிஸ்தான் தூதக அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி

இந்து சிறுபான்மையினரைச் சேர்ந்த பெண்கள் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு பலவந்தமாக திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். 

இந்த நிலையில், பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தின் தார்பர்கர் மாவட்டத்தில் உள்ள உமர் கிராமத்தில் ஜனவரி 14-ம் தேதி, சாந்தி மேக்வா மற்றும் சர்மி  மேக்வா ஆகிய இரண்டு இந்து சிறுமிகள் கடத்தப்பட்டனர். ஜனவரி 15 அன்று சிந்துவின் யாக்கோபாபாத் மாவட்டத்தில் இருந்து மேலும் ஒரு சிறுமி கடத்தப்பட்டார்.

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசில் சிறுபான்மையினரான இந்து சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளை கடத்திய விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரக மூத்த அதிகாரிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சகம் சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து ஆஜரான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவின் கவலைகள் குறித்து  தெரிவிக்கப்பட்டதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் சம்பந்தப்பட்ட இத்தகைய அதிர்ச்சியூட்டும் மற்றும் இழிவான சம்பவங்களில் இந்திய மக்கள் தரப்பினரால் வெளிப்படுத்தப்பட்ட கடுமையான கவலைகள் குறித்து பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story