பட்ஜெட்

நாளை பட்ஜெட் தாக்கல்; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது + "||" + Budget tomorrow; Parliament meets today

நாளை பட்ஜெட் தாக்கல்; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

நாளை பட்ஜெட் தாக்கல்; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றுகிறார். நாளை பட்ஜெட் தாக்கல் ஆகிறது.

புதுடெல்லி, 

நாடாளுமன்றம் பட்ஜெட் தொடருக்காக இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகிறது. இது, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆகும். எனவே இரு சபைகளின் கூட்டுக்கூட்டம் நடக்கிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அவர் அரசின் கொள்கைகளையும், முக்கிய திட்டங்களையும் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஜனாதிபதியின் உரையைத்தொடர்ந்து நடப்பு (2019–2020) நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கலாகிறது. இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடியாக இந்த ஆய்வு அறிக்கை இருக்கும்.

இந்த அறிக்கையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியன் தலைமையிலான குழு தயாரித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவு கண்டதற்கு சவாலாக அமைந்த அம்சங்களும் பொருளாதார ஆய்வு அறிக்கையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020–2021 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரிந்து கிடக்கிற பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் வகையில் அவர் என்ன திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்கப்போகிறார் என தொழில் துறையினர் மட்டுமல்ல, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

டிசம்பர் மாதம் பண வீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதையெல்லாம் சமாளிக்கவும், விலைவாசி குறையவும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும் பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்படுமா, வரி விதிப்பு அடுக்கில் (ஸ்லேப்) மாற்றம் வருமா என்ற கேள்வியும் மாத சம்பளதாரர் மத்தியில் இருக்கிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அ.தி.மு.க. சார்பில் வக்கீல் நவனீத கிருஷ்ணன், ஓ.பி.ரவீந்திரநாத் குமார், தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, பொருளாதார பிரச்சினைகள் குறித்தும், இப்போதைய உலகளாவிய பொருளாதார சூழ்நிலையை எப்படி இந்தியா சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அழைப்பு விடுத்தார்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு 45 மசோதாக்களை நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளது.

கூட்டம் முடிந்த பிறகு திருச்சி சிவா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கூட்டத்தில் மிக முக்கியமாக குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தெரிவித்தோம். இந்த சட்டத்தால் நாடு முழுவதும் கொந்தளிப்பு உருவாகி இருப்பதை குறிப்பிட்டு, இந்த பிரச்சினையை அரசு கவனமுடன் கையாண்டு சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டோம். சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று ஒருபுறம் கோரிக்கை இருந்தாலும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கு அவையில் இதை மிக முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பனை கண்டுபிடிப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வேண்டும் என்ற விதி இருந்ததை தளர்த்தி இனிமேல் அது தேவையில்லை என்று திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபற்றி பிரதமரிடம் எடுத்துக்கூறினோம். டெல்டா பகுதி பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது; டெல்டா பகுதிகளை வேளாண்மை மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருக்கும்போது, அதை பெட்ரோல் மண்டலமாக மாற்றி விடுவீர்களோ என்று சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே முன்பு இருந்தது போலவே சுற்றுச்சூழல் அனுமதியும், மக்கள் கருத்தும் தேவை என்று குறிப்பிட்டோம். இதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கியமாக வலியுறுத்த சொன்னார்

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டாக சந்திப்பது தொடர்பான உத்தியை வகுப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் நாளை பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் கூடிப்பேச உள்ளதாகவும் தலைநகர் தகவல்கள் கூறுகின்றன.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, விலைவாசி உயர்வு, பணவீக்கம், பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு, வேலை இல்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல வி‌ஷயங்களில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11–ந் தேதி வரையும், மார்ச் 2–ந் தேதி முதல் ஏப்ரல் 3–ந் தேதி வரையும் இரு கட்டங்களாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் வருகை
நாடாளுமன்றத்தில் 2020-2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்படுகிறது.
2. மக்களவையில் ஆயுத சட்டத்திருத்தம் அறிமுகம்
மக்களவையில் ஆயுத சட்டத்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் ஒருவர் அதிகபட்சம் 2 துப்பாக்கிதான் வைத்திருக்க முடியும்.
3. நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட தின கொண்டாட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு; சோனியா தலைமையில் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட தின கொண்டாட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தின.
4. நாடாளுமன்றத்தில் கம்பெனி வரி குறைப்பு மசோதா தாக்கல்
நாடாளுமன்றத்தில் கம்பெனி வரி குறைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
5. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.