அந்நிய நேரடி முதலீடு ஆண்டுதோறும் உயர்வு; மத்திய நிதி இணை மந்திரி
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டின் நவம்பர் வரையில் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 592 கோடியாக உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மேலவையில் மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாகூர் கேள்வி நேரத்தின்பொழுது பேசும்பொழுது, இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் நவம்பர் வரையில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 592 கோடியாக உள்ளது.
இது கடந்த 2018-19 முழு நிதியாண்டில் ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 632 கோடியாக இருந்தது. இது கடந்த 2017-18ம் நிதியாண்டில் ரூ.4 லட்சத்து 33 ஆயிரத்து 796 கோடியாகவும், கடந்த 2016-17ம் நிதியாண்டில் ரூ.4 லட்சத்து 28 ஆயிரத்து 953 கோடியாகவும் இருந்தது என அதற்கான தகவலை சமர்ப்பித்து கூறியுள்ளார்.
உலக அளவில் அந்நிய நேரடி முதலீடு குறைந்துள்ளபோதிலும், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு வளர்ச்சி கண்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு அவை வெற்றி பெற்றுள்ளன. இதனால் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடானது அதிகரித்து உள்ளது.
இந்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் அனைத்து துறைகளிலும் அந்நிய நேரடி முதலீடு இன்னும் ஊக்குவிக்கப்படும். எளிமைப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகள், அந்நிய நேரடி முதலீட்டு கொள்கைகளில் விரிவான சீர்திருத்தங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்தபின்பு முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
உலக முதலீடு அறிக்கை 2019ன்படி, கடந்த 2018ம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டில் 25வது இடம் என்பதில் இருந்து 9வது இடத்திற்கு இந்தியா உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story