நிர்பயா கொலை குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது - மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


நிர்பயா கொலை குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது - மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Feb 2020 10:27 PM GMT (Updated: 5 Feb 2020 10:27 PM GMT)

நிர்பயா கொலை குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என்று கூறி மத்திய அரசின் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ‘நிர்பயா’ என்று அழைக்கப்படுகிற துணை மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. இதனால் அவர்களை கடந்த 1-ந்தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வந்தன.

ஆனால் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேரும் மாறி, மாறி கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக அவர்களை 1-ந்தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி செசன்சு கோர்ட்டு தடை விதித்தது.

செசன்சு கோர்ட்டின் இந்த தடை உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில், மத்திய உள்துறை அமைச்சகம் மேல்முறையீடு செய்தது. இதேபோல் டெல்லி சிறைத்துறையும் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை விடுமுறை நாட்களான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிபதி சுரேஷ் குமார் கயித் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி சுரேஷ் குமார் கயித் தீர்ப்பு வழங்கினார்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

கடந்த 2017-ம் ஆண்டு மே 5-ந்தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு இந்த குற்றவாளிகளின் மரண தண்டனையை உறுதி செய்தது. ஆனால் இந்த குற்றவாளிகளுக்கு மரண வாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று யாரும் கவலைப்படவில்லை. இதை கூறுவதற்கு இந்த கோர்ட்டுக்கு எந்த தயக்கமும் இல்லை.

குற்றவாளி ஒருவரின் கருணை மனு நிலுவையில் இருக்கும்போது அவருடன் சேர்ந்த மற்ற குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்றலாம் என்று டெல்லி சிறை விதிகள் கூறவில்லை. ஒரே வழக்கு, ஒரே தண்டனை என்பதால் இவர்களை தனித்தனியாக தூக்கில் போட அனுமதி அளிக்க முடியாது.

குற்றவாளிகளின் நிலை குறித்து சுப்ரீம் கோர்ட்டு ஒருமித்த முடிவாக தீர்ப்பு வழங்காத வரையில், குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. அனைவரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட வேண்டும். எனவே மத்திய அரசு மற்றும் டெல்லி சிறைத்துறையின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

அதேசமயம் இந்த குற்றவாளிகள் அனைவரும் இன்று (நேற்று) தொடங்கி ஒரு வாரத்துக்குள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சட்டரீதியான உரிமைகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ‘கெடு’ விதிக்கப்படுகிறது. சட்ட உரிமைகளை காரணம் காட்டி குற்றவாளிகள் தொடர்ந்து காலம் தாழ்த்த முடியாது. இந்த ஒருவார ‘கெடு’வுக்கு பிறகு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

டெல்லி ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசு தரப்பில் நேற்று மாலை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் தாக்கப்படுவது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பிரச்சினையை கிளப்பினார்கள்.

அப்போது அதுகுறித்து கவலை தெரிவித்த சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிர்பயா கொலை குற்றவாளிகள், தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும், அதை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறினார். 4 பேரின் தூக்கு தண்டனையையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து இருப்பதால், அவர்கள் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் அப்போது அவர் கூறினார்.


Next Story