மத்திய மந்திரியை ஆவேசமாக நெருங்கிய தமிழக எம்.பி... மக்களவையில் பரபரப்பு... அவை ஒத்தி வைப்பு


மத்திய மந்திரியை ஆவேசமாக நெருங்கிய தமிழக எம்.பி... மக்களவையில் பரபரப்பு... அவை ஒத்தி வைப்பு
x
தினத்தந்தி 7 Feb 2020 10:38 AM GMT (Updated: 7 Feb 2020 10:38 AM GMT)

மக்களவையில் ராகுல் காந்தி குறித்து மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

புதுடெல்லி

டெல்லியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய இளைஞர்கள் இன்னும் ஆறு மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, பிரம்பு  கொண்டு அடிப்பார்கள் என கூறினார்.

இதற்கு ஜனாதிபதி  உரை மீது நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தம்முடைய முதுகை வலிமையாக்கி கொள்ள அதிக சூரிய நமஸ்காரம்  செய்வேன் என, ராகுல்காந்தியின் பேச்சுக்கு மறைமுகமாக பதில் அளித்து பேசினார். மேலும் ராகுல்காந்தியை டியூப்லைட் என மறைமுகமாக குறிப்பிட்டார்.

மக்களவை இன்று காலை தொடங்கியதும், கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி எழுந்து, " நாட்டில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ள விவரம்" குறித்துக் கேட்டார்.

இதற்கு மத்திய சுதாகாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் அளிக்க எழுந்தார். இந்த கேள்விக்குப் பதில் அளிக்கும் முன், பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி இயல்புக்கு மாறாக விமர்சனம் செய்தமைக்கு கண்டனம் தெரிவிப்பதாக அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

சபாநாயகர் குறுக்கிட்டு மந்திரியை  நோக்கி கேள்விக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனினும்,மத்திய மந்திரியின் கருத்துக்கு எதிர்த்தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

மேலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். பதிலுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர் அமைச்சர் இருக்கையின் அருகே விரைந்து சென்றார். இதனை அடுத்து, பாஜக உறுப்பினர்கள் அங்கே கூடினர்.

எதிர்தரப்பில் காங்கிரஸ் எம்.பி.க்களும் அங்கு வர மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால், கடும் அமளி ஏற்பட அவையை  ஒரு மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார். ஒத்தி வைக்கப்பட்ட அவை மீண்டும் கூடியதும், அமளி தொடர்ந்ததால் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் கூடியபோது காங்கிரஸ், பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடவே அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவையை நடத்திய ஏ.ராஜா அறிவித்தார்.

இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில், " மத்திய மந்திரி  ஹர்ஷவர்த்தனை தாக்க காங்கிரஸ் எம்.பி. முயன்றது கண்டிக்கத்தக்கது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய மந்திரி ஏதாவது தவறாகப் பேசி இருந்தால், அதை சபாநாயகர் பார்த்து நடவடிக்கை எடுப்பார், ஆனால், மந்திரியை  தாக்க முற்படுவது கண்டனத்துக்குரியது" எனத் தெரிவித்தார்

Next Story