“இந்தியாவில் ஒடுக்கப்படுவதாக உணர்ந்தால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்” பிரபல கவிஞரின் மகளுக்கு, பா.ஜனதா எம்.பி. பதில்


“இந்தியாவில் ஒடுக்கப்படுவதாக உணர்ந்தால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்” பிரபல கவிஞரின் மகளுக்கு, பா.ஜனதா எம்.பி. பதில்
x
தினத்தந்தி 10 Feb 2020 10:25 PM GMT (Updated: 10 Feb 2020 10:25 PM GMT)

இந்தியாவில் ஒடுக்கப்படுவதாக உணர்ந்தால் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று பிரபல கவிஞரின் மகளுக்கு பா.ஜனதா எம்.பி. பதிலளித்துள்ளார்.

அலிகார்,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) கொண்டு வந்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பிரபல உருது கவிஞர் முனாவர் ராணாவின் மகளும், சமூக ஆர்வலருமான சுமையா ராணா, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார். உள்ளூர் அதிகாரிகளின் நெருக்கடிக்கு மத்தியிலும், ஈத்காவில் போராட்டம் நடத்தும் பெண்களை சந்தித்தார்.

அப்போது சுமையா ராணா பேசுகையில், “நம்முடைய போராட்டம் முற்றிலும் அமைதியானது. அமைதியாக போராடுவது நமது ஜனநாயக உரிமையாகும். ஆனால், லக்னோவில் நம்முடைய போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நிர்ப்பந்தப்படுத்தப்படும் கட்டாய நடவடிக்கைகளை போலீஸ் மேற்கொள்கிறது. போராட்டம் காரணமாக லக்னோவில் பெண்களுக்கான கழிவறைகள் அடைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் நெருக்கடியை தருகிறது” என்றார்.

சுமையா ராணாவின் இந்த குற்றச்சாட்டுக்கு அலிகார் தொகுதியில் பா.ஜனதா எம்.பி. சதீஷ் கவுதம் காட்டமாக பதிலளித்து உள்ளார். அலிகாரில் செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ் கவுதம், “சுமையா, இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்படுவதாக உணர்ந்தால் பாகிஸ்தான் செல்ல வேண்டும்” என்று கூறினார்.

பா.ஜனதா எம்.பி.யின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளன.

Next Story