ஏப்ரல் 1-ந் தேதி தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணி தொடக்கம்


ஏப்ரல் 1-ந் தேதி தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணி தொடக்கம்
x
தினத்தந்தி 12 Feb 2020 12:04 AM GMT (Updated: 12 Feb 2020 12:04 AM GMT)

தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணியை ஏப்ரல் 1-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைக்கிறார். அதில் முதல் நபராக அவர் தன்னைப் பற்றிய விவரங்களை தெரிவிக்கிறார்.

புதுடெல்லி,

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) தயாரிக்கும் பணிகளை ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2021-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் மக்கள் தங்களின் பெயரை சேர்க்க ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு எண் (பான்) உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட 21 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை குடும்ப தலைவர் காட்ட வேண்டியதிருக்கும். இது தொடர்பாக மத்திய அரசு உரிய அறிவுறுத்தலை வழங்கும் என கூறப்படுகிறது.

ஆனால் இது என்.ஆர்.சி. எனப்படும் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கான முன்னோடி பணிகள் என கூறி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் சில மாநிலங்கள் இந்த என்.பி.ஆர். பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தொடங்கும் இந்த தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் முதல் நபராக தனது பெயரை பதிவு செய்து இத்திட்டதை தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் குடிமகன் என்பதால்.....

இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியாவின் முதல் குடிமகன் என்பதால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் முதல் நபராக தன்னைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்வார்’ என கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் அந்த செய்திக்குறிப்பில், ‘ஜனாதிபதி எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கி வைப்பது புதிய நடைமுறை இல்லை என்றாலும், என்.பி.ஆர்.-ஐ பொறுத்தவரை மக்கள் மத்தியில் உள்ள சர்ச்சை கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், மக்களிடையே இதுகுறித்த ஒரு வலுவான உறுதித்தன்மையை விதைக்கும் விதமாகவும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட உள்ளது’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story