‘மோடியின் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி’ வெளிநாட்டு பத்திரிகைகளில் டெல்லி தேர்தல் பற்றிய செய்தி


‘மோடியின் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி’ வெளிநாட்டு பத்திரிகைகளில் டெல்லி தேர்தல் பற்றிய செய்தி
x
தினத்தந்தி 12 Feb 2020 10:15 PM GMT (Updated: 12 Feb 2020 10:15 PM GMT)

டெல்லி தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி என்று வெளிநாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார். மாநில தேர்தலில் ஆம் ஆத்மிக்கு குடியுரிமை சட்டம் உள்ளிட்ட விவகாரங்களை வைத்து கடுமையான போட்டியை கொடுத்தாலும் பா.ஜனதாவால் 8 இடங்களில் மட்டும்தான் வெற்றிபெற முடிந்தது. நேற்றைய இந்திய பத்திரிகைகளின் முதல் பக்கம் ஆம் ஆத்மியின் வெற்றி செய்தியால் அலங்கரிக்கப்பட்டன.

வெளிநாட்டு பத்திரிகைகளும் டெல்லி தேர்தல் முடிவு பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளன. அவைகளை பார்க்கலாம்.

மோடி கட்சி தோல்வி

“கசப்பான டெல்லி தேர்தலில் மோடியின் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது” என்று தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தி வாஷிங்டன் போஸ்ட், “மோடியின் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி” என செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஏழை மக்களுக்கான கொள்கையில் பணியாற்றி, அரசு பள்ளிகளை கட்டமைப்பது, குறைந்த விலையில் மின்சாரம் வழங்கல், இலவசமாக மருத்துவம் மற்றும் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் வழங்கிய ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான போட்டியில் பா.ஜனதா குழிக்குள் தள்ளப்பட்டது எனக்குறிப்பிட்டுள்ளது.

பிரசாரம் பலனளிக்கவில்லை

புதுடெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவின் தேர்தல் பிரசாரம் பலனளிக்கவில்லை என்பதை காட்டுகிறது என அல்ஜெசீரா செய்தி வெளியிட்டு உள்ளது. சுமார் 2 கோடி மக்கள் வசிக்கும் டெல்லியில் கெஜ்ரிவாலின் ஏழை சார்பு கொள்கைகளை வாக்காளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள் என்பது தொடர்பாக விரிவாக எழுதியுள்ளது.

டெல்லி தேர்தலில் பா.ஜனதா பின்னடவை சந்தித்து உள்ளது என பி.பி.சி.யும் செய்தி வெளியிட்டு உள்ளது. ஊழல் எதிர்ப்பு பிரசாரம் செய்த கெஜ்ரிவால் டெல்லியில் நலத்திட்டங்களை கொண்டுவந்து எவ்வாறு அரசியலில் புகழ் பெற்றார் என்பதை குறிப்பிட்டுள்ளது.

தி கார்டியன் பத்திரிகை, டெல்லியில் பா.ஜனதா தோல்வியை தழுவியதை மோடிக் கான தோல்வியென குறிப்பிட்டு உள்ளது. பிரித்தாளும் பிரசாரம் மேற்கொண்ட பா.ஜனதா மற்றொரு முக்கியமான மாநிலத்தில் பெரும் தோல்வியை தழுவியுள்ளது என செய்தியில் குறிப்பிட்டு உள்ளது.

Next Story