ஏர் இந்திய ஊழியர்களுக்கு நன்றி - பிரதமர் மோடி கடிதம்


ஏர் இந்திய ஊழியர்களுக்கு நன்றி - பிரதமர் மோடி கடிதம்
x
தினத்தந்தி 13 Feb 2020 3:40 PM GMT (Updated: 13 Feb 2020 3:40 PM GMT)

சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்திய ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் அந்த நாடு மட்டுமின்றி பல வெளிநாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் தொடங்கி 2 மாதங்களாகிறது. இதனை கட்டுப்படுத்த சீன அரசும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து போராடி வருகின்றன. சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்தநிலையில் சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் சுமார் 45-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. அந்த கல்லூரிகளில் சுமார் 21,000 இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா வைரஸ்  பரவத் தொடங்கியதும் பெரும்பாலான இந்திய மாணவர்கள் சீனாவை விட்டு வெளியேறிவிட்டனர்.

கொரோனா வைரஸ்  பாதிப்பு அதிகரித்ததால் அந்த நகரத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பேருந்து, ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அப்போது உகான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி கொண்டனர்.  இதில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவ, மாணவியர். அவர்களை மீட்க மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தது.

கடந்த ஜனவரி 31-ம் தேதி டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானம் உகான் நகருக்கு சென்றது. அதில் 324 இந்தியர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மேலும் 323 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் உகானில் இருந்து டெல்லிக்கு திரும்பினர்.

இந்த மீட்புப் பணியை ஏர் இந்தியாவை சேர்ந்த 34 பேர் அடங்கிய குழு வெற்றிகரமாக செய்து முடித்தது. மீட்பு குழுவின் தலைவராக கேப்டன் அமிதாப் சிங் செயல்பட்டார். கேப்டன் கமல் மோகன், கேப்டன் சஞ்சய், கேப்டன் ரீஷா, கேப்டன் பூபேஷ் நரேன் ஆகியோர் விமானத்தை இயக்கினர். 

கொரோனா வைரஸ் தொற்றிவிடுமோ என்ற அச்சத்தில் சீனாவுக்கு இயக்கப்பட்ட விமான சேவைகளை அனைத்து நாடுகளும் ரத்து செய்துவிட்டன. மத்திய அரசு மிகவும் துணிச்சலாக செயல்பட்டு 2 விமானங்களை அனுப்பி இந்தியர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வந்தது.

இந்நிலையில், சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்திய ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.  இந்தக் கடிதத்தை  விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி அக்குழுவினரிடம் ஒப்படைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story