அசாமில் தகவல்கள் அழிந்தது: தேசிய குடிமக்கள் பதிவேடு அலுவலக ஊழியர் மீது வழக்கு


அசாமில் தகவல்கள் அழிந்தது: தேசிய குடிமக்கள் பதிவேடு அலுவலக ஊழியர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Feb 2020 11:19 PM GMT (Updated: 13 Feb 2020 11:19 PM GMT)

தேசிய குடிமக்கள் பதிவேடு அலுவலக ஊழியர் மீது வழக்கு பதியப்பட்டது.

கவுகாத்தி, 

தேசிய குடிமக்கள் பதிவேடான என்.ஆர்.சி.யின் அசாம் மாநில முன்னாள் திட்ட அதிகாரியாக ஒரு பெண் ஊழியர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினார். அவர் கடந்த ஆண்டு நவம்பர் 11-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதற்கு முன்பு அலுவலக வலைத்தளத்தில் உள்ள சர்ச்சைக்குரிய அசாமின் திருத்தப்பட்ட குடிமக்கள் பதிவேட்டின் தகவல்களுக்கான கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) அலுவலகத்தில் ஒப்படைக்கவில்லை.

எனவே அவருக்கு அதனை தெரிவிக்கும்படி பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டது. ஆனாலும் அவர் இதுவரை அதனை தெரிவிக்கவில்லை. அவர் அதனை புதுப்பிக்கவும் இல்லை. இதனால் டிசம்பர் 15-ந்தேதி அந்த தகவல்கள் அனைத்தும் அலுவலக வலைத்தளத்தில் இருந்து மாயமானது. டிசம்பர் 24-ந்தேதி புதிய அதிகாரியாக ஹிதேஷ்தேவ் சர்மா பதவி ஏற்றார்.

இதுபற்றி தகவல் அறிந்த சர்மா அந்த பெண் ஊழியர் மீது அலுவலக ரகசியம் தொடர்பான விதிகளை மீறியதாக போலீசில் புகார் செய்தார். அதன்படி அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தகவல்கள் அனைத்தும் ஆப்லைனில் உள்ளது. அதனை மீட்கும் பணியில் விப்ரோ நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் சர்மா தெரிவித்தார்.

Next Story
  • chat