உமர் அப்துல்லா தடுப்புக்காவலுக்கு எதிராக மனு ; உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை


உமர் அப்துல்லா தடுப்புக்காவலுக்கு எதிராக மனு ;  உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
x
தினத்தந்தி 14 Feb 2020 8:17 AM IST (Updated: 14 Feb 2020 8:17 AM IST)
t-max-icont-min-icon

உமர் அப்துல்லா தடுப்புக்காவலுக்கு எதிராக அவரது சகோதரி தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5 ம் தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஒரு சிலர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உமர் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில், “பாராளுமன்ற உறுப்பினராக நாட்டுக்காக பணியாற்றியவர், மாநில முதல்வராக இருந்தவர், மத்திய மந்திரியாக இருந்தவரால் மாநிலத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ம் தேதி இரவு முதல் உமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை காவலில் வைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

1 More update

Next Story