நிர்பயா குற்றவாளி வினய்சர்மா மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளனர்.
அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு, மறுஆய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர் களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போய் இருக்கிறது.
இதற்கிடையே குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா, தன்னுடைய கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூசண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. குற்றவாளி வினய் குமார் சர்மா தரப்பில் ஆஜரான வக்கீல் ஏ.பி.சிங் வாதாடினார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வினய் குமார் சர்மாவின் மனு மீதான தீர்ப்பை இன்று (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 2 மணிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கருணை மனுவை குடியரசுத்தலைவர் உரிய முறையில் ஆராயவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது என்றும், குற்றவாளி வினய் சர்மா நல்ல உடல், மனநலத்துடன் உள்ளார் என்று தீர்ப்பு வழங்கினர். மேலும் கருணை மனுவை குடியரசுத்தலைவர் நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினர்.
Related Tags :
Next Story