சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சரிசெய்ய இட ஒதுக்கீடு விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சரிசெய்ய   இட ஒதுக்கீடு விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும்   மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Feb 2020 10:00 PM GMT (Updated: 14 Feb 2020 8:12 PM GMT)

இட ஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சரி செய்யும் விதத்தில் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை விடுத்து உள்ளார்.

புதுடெல்லி, 

உத்தரகாண்ட் மாநிலத்தில், விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், அரசு காலி பணியிடங்களை நிரப்ப முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு, 2012-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு சட்டவிரோதம், செல்லாது என தீர்ப்பு அளித்தது. அதை ரத்தும் செய்தது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உத்தரகாண்ட் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா அமர்வு விசாரித்து கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பில், “இந்த கோர்ட்டு வகுத்துள்ள சட்டத்தை கருத்தில் கொள்கிறபோது மாநில அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பதவி உயர்வில் இடஒதுக்கீடு கேட்பதற்கு எந்தவொரு தனி நபருக்கும் உள்ளார்ந்த எந்த அடிப்படை உரிமையும் இல்லை” என கூறப்பட்டது.

இதனால் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது என்ற நிலை உருவாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் புயல்

இந்த தீர்ப்பு நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியது. தீர்ப்புக்கு எதிராக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

அப்போது லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் பேசும்போது, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் தொடர்பான எல்லா விவகாரங்களையும் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இப்படி செய்கிறபோது, இந்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டுக்கு போக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு மறுஆய்வு மனு

இந்த நிலையில், லோக்ஜனசக்தி கட்சியின் நிறுவனரும், மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று சிறப்பு பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

இட ஒதுக்கீடு பிரச்சினையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கேட்டு மனு தாக்கல் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான சட்ட கருத்துகள் பெறப்படுகின்றன.

மறு ஆய்வு மனு தாக்கல் செய்து, இந்த விவகாரம் மறுபடியும் கோர்ட்டுக்கு போகலாம். ஆனால் அது வெற்றி பெறுமா என்பதை பார்க்க வேண்டும்.

அவசர சட்டம்

இந்த பிரச்சினையில், எளிய தீர்வு என்பது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சரி செய்வதற்கு அவசர சட்டம் கொண்டுவருவதுதான் என்பது எனது கருத்து. அத்துடன் அரசியல் சாசனத்திலும் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

மேலும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் தொடர்பான விவகாரங்கள் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்த முடியாதபடிக்கு அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்ற கூட்டம் தற்போது நடைபெறாத காரணத்தால், இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் வலியுறுத்தி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Next Story