அமித் ஷா முன்னிலையில் பாபுலால் மராண்டி பா.ஜனதாவில் இணைந்தார்


அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த பாபுலால் மராண்டி : படம் ANI
x
அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த பாபுலால் மராண்டி : படம் ANI
தினத்தந்தி 17 Feb 2020 12:20 PM GMT (Updated: 17 Feb 2020 1:30 PM GMT)

ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, இன்று பாஜகவில் இணைந்தார்.

ராஞ்சி

ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா  கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி, இன்று பா.ஜனதாவில்  இணைந்தார்.

ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பாபுலால் மராண்டி பா.ஜனதாவில் இணைந்தார்.

நிகழ்ச்சியில்  பேசிய  அமித்ஷா கூறியதாவது:-

பாபுலால் மராண்டி மீண்டும் பாஜகவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு உரிய மரியாதையும், பொறுப்புகளும் பாஜகவில் வழங்கப்படும்.  ஜார்கண்ட் மக்களின் விருப்பப்படி அவர் இப்போது பாஜகவில் சேர்ந்துள்ளார்.

நான் 2014 ல் பாஜக தலைவரானதிலிருந்து பாபுலால் மராண்டியை பாஜகவுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறேன். அவர் மிகவும் பிடிவாதமானவர் என்று ஒருவர் சரியாகச் சொன்னார். எங்களால் அவரை எளிதில் சம்மதிக்க வைக்க முடியவில்லை.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஜார்கண்ட் அரசாங்கத்தின் பொது நல திட்டங்களுக்கு பாஜக ஆதரவளிக்கும். ஆனால் நக்சலிசம், பயங்கரவாதம் மற்றும் ஊழலை ஊக்குவிக்கும் முயற்சிகளை நாங்கள் எதிர்ப்போம். இந்த பிரச்சினைகளுக்கு எதிராக நாங்கள் சட்டமன்றத்திலும் வெளியேயும் போராடுவோம் என கூறினார்.

யார் இந்த பாபுலால் மராண்டி?

பா.ஜனதாவில்  கடந்த 1990களில் இருந்து தீவிரமான விஸ்வாசியாக இருந்துவந்த பாபுலால் மராண்டி பாஜவில் 4 முறை எம்.பியாகவும், வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார்.

பீகாரில் இருந்து ஜார்கண்ட் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டபின், அங்கு நடந்த தேர்தலில் முதலாவது முதலமைச்சராக பாபுலால் மராண்டி பொறுப்பேற்றார். 2000 முதல் 2003-ம் ஆண்டுவரை முதல்வராக பாபுலால் மராண்டி இருந்தார்.

அதன்பின் பா.ஜனதா தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சியில் இருந்து பிரிந்து, 2006-ம் ஆண்டு ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா எனும் கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். ஆனால், அதன்பின் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் கணிசமான அளவுக்கு 5 எம்எல்ஏக்கள் வரை பெற்றாலும் மக்களவைத் தேர்தலில் ஒரு இடம் கூடப் பெறவில்லை.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாபுலால் மராண்டி கட்சி 2 முதல் 3 இடங்களையே பெற்றது. இதையடுத்து, தனது கட்சியை பா.ஜனதாவுடன் இணைக்க பாபுலால் மராண்டி முடிவு செய்தார். இதற்காக ராஞ்சி நகரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் முன்னிலையில் பாபுலால் மராண்டி பாஜகவில் இணைந்தார்.

Next Story