மும்பை தாக்குதல்: கசாப்பை இந்துவாக அடையாளம் காட்ட முயற்சி; அதிர்ச்சி தகவல்


மும்பை தாக்குதல்:  கசாப்பை இந்துவாக அடையாளம் காட்ட முயற்சி; அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 18 Feb 2020 1:34 PM GMT (Updated: 18 Feb 2020 1:34 PM GMT)

மும்பையில் தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப்பை ஓர் இந்துவாக அடையாளம் காட்ட லஷ்கர் இ தைபா முயற்சித்தது என தகவல் வெளிவந்துள்ளது.

மும்பை,

மும்பைக்குள், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி கடல் மார்க்கமாக நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.  இதில் போலீசார், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தவிர மற்ற 9 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிப்பட்ட பயங்கரவாதியான, பாகிஸ்தானின் பரீத்கோட் நகரை சேர்ந்த அஜ்மல் அமீர் கசாப் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 21ந்தேதி தூக்கிலிடப்பட்டான்.

இந்த வழக்கை மும்பை முன்னாள் காவல் ஆணையாளர் ராகேஷ் மரியா விசாரணை மேற்கொண்டார்.  இந்நிலையில், 'லெட் மீ சே இட் நவ்' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை மரியா எழுதியுள்ளார்.

அதில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு உள்ளார்.  மும்பை தாக்குதலை நடத்தியது பெங்களூரு நகரை சேர்ந்த சமீர் சவுத்ரி என்ற ஓர் இந்து என அடையாளம் காட்ட லஷ்கர் இ தைபா பயங்கரவாத இயக்கம் முயற்சித்துள்ளது என அதிர்ச்சிகர தகவலை அவர் தெரிவித்து உள்ளார்.

சிறையில் இருந்த கசாப்பை அங்கேயே கொல்வதற்கு முயற்சி நடந்துள்ளது.  ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் உளவு அமைப்பு) மற்றும் லஷ்கர் இ தைபா பயங்கரவாத இயக்கம் ஆகியவை அதற்கான திட்டம் வகுத்தது.  இதன்படி, மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலுக்கு அந்த பணியை வழங்கியிருந்தது.

இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில், அந்த பயங்கரவாத அமைப்பு, இந்திய முகவரிகளுடன் கூடிய போலியான அடையாள அட்டைகளை பயங்கரவாதிகளுடன் இணைத்து வைத்திருந்தது.  ஒரு புகைப்படத்தில், கசாப்பின் வலது கையில் சிவப்பு நிற கயிறு கட்டப்பட்டு இருந்தது.  அது இந்துக்களின் புனித கயிறு.  அதனால் தாக்குதலை 'இந்து பயங்கரவாதம்' என்று காட்சிப்படுத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின்படி அனைத்தும் நடந்து இருந்தால், சவுத்ரியாக கசாப் உயிரிழந்து இருக்க கூடும்.  இந்த தாக்குதலை நடத்தியது இந்து பயங்கரவாதிகள் என ஊடகங்கள் குற்றச்சாட்டு கூறியிருக்கும்.

மும்பையை இந்து பயங்கரவாதிகள் எப்படி தாக்கியுள்ளனர்? என அலறலாக தலைப்பு செய்திகள் வந்திருக்கும்.  முன்னணி தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள், கசாப்பின் குடும்பம் மற்றும் அண்டை வீட்டாரிடம் பேட்டி எடுப்பதற்காக பெங்களூரு நகருக்கு அணிவகுத்து சென்றிருக்க கூடும்.  ஆனால், அது நடக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

Next Story