பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்; பெண்ணுக்கு ஓவைசி கண்டனம்


பேரணியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்; பெண்ணுக்கு ஓவைசி கண்டனம்
x
தினத்தந்தி 20 Feb 2020 4:30 PM GMT (Updated: 20 Feb 2020 4:30 PM GMT)

பெங்களூருவில் நடந்த பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பிய பெண்ணுக்கு ஓவைசி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இதைப்போல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இந்த சட்டத்தை எதிர்த்து உள்ளன. அதன்படி இந்த சட்டத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் பேரணிகளும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்று இன்று நடந்தது.  இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் ஓவைசி கலந்து கொண்டார்.

பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா என்ற இளம்பெண் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பினார்.  அவரை தடுத்து நிறுத்திய ஓவைசி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதனை அடுத்து அந்த இளம்பெண் மீது 124ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.  அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.  இதன்பின் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார்.

Next Story