தர்ம காரியத்துக்காக வழங்கப்பட்ட இடத்தை விற்க சுப்ரீம் கோர்ட்டு தடை 16 ஆண்டுகால சட்ட போராட்டத்தில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் வெற்றி


தர்ம காரியத்துக்காக வழங்கப்பட்ட இடத்தை விற்க சுப்ரீம் கோர்ட்டு தடை 16 ஆண்டுகால சட்ட போராட்டத்தில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் வெற்றி
x
தினத்தந்தி 20 Feb 2020 11:02 PM GMT (Updated: 20 Feb 2020 11:02 PM GMT)

ஸ்ரீரங்கம் கோவிலில் தர்ம காரியத்துக்காக வழங்கப்பட்ட இடத்தை விற்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதன் மூலம் 16 ஆண்டுகால சட்ட போராட்டம் நடத்திய ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் வெற்றி பெற்றுள்ளது.

புதுடெல்லி, 

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிரசித்தி பெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தர்ம காரியங்களை செய்வதற்காக கடந்த 1887-ம் ஆண்டு தொழில் அதிபர் பி.கே.தொப்புலான் செட்டியார் என்பவர் 25 ஆயிரம் சதுர அடி நிலத்தை 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். அதில், 4,135 சதுர அடி இடத்தில் மண்டபம் கட்டினார். அந்த காலத்தில் விழாக்களின் போது குடிநீர், திணைக்கஞ்சி போன்றவை வழங்குவதற்காக இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

1901-ம் ஆண்டு தொப்புலான் செட்டியார், இந்த இடத்தை யாருக்கும் விற்பனை செய்வதற்கோ அல்லது அடமானம் வைப்பதற்கோ தடை விதிக்கும் வகையில் ஒரு செட்டில்மென்ட் பதிவை மேற்கொண்டார். தனது இறப்புக்கு பின்பு, இந்த இடத்தில் இருந்து வரும் வருமானத்தின் மூலம் தர்மகாரியங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது சந்ததியினருக்கு அறிவுறுத்தி இருந்தார்.

விற்பனை செய்ய முடிவு

1978-ம் ஆண்டு இந்த இடம் ஒரு தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அந்த நிறுவனம் பல்வேறு நபர்களுக்கு அந்த இடத்தை உள்வாடகைக்கு விட்டது. 2,500 சதுர அடி இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பி.கே.தொப்புலான் செட்டியார் ராமானுஜ கூடம் அன்னதான அறக்கட்டளை சப்-கோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்தது.

அதேவேளையில் 2004-ம் ஆண்டு அந்த அறக்கட்டளை, மண்டபத்தை தவிர்த்து மீதமுள்ள 20,865 சதுர அடி நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது. அறக்கட்டளை பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள பணம் தேவைப்படுவதால் இந்த முடிவை எடுப்பதாக அறக்கட்டளை அறிவித்தது.

அனுமதி கோரி வழக்கு

இதைத்தொடர்ந்து, 20,865 சதுர அடி நிலத்தை விற்பனை செய்ய அனுமதி கோரி அறக்கட்டளை சார்பில் சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் ஒரு மனுவை தாக்கல் செய்து, இடத்தை விற்பனை செய்வது தொடர்பான அனுமதியை இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் தான் அறக்கட்டளை கோர வேண்டும் என்றது.

இந்த அறக்கட்டளை தனியார் அறக்கட்டளை என்பதால் கோவில் நிர்வாகத்தின் மனுவை அனுமதிக்க முடியாது என சப்-கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு ஆகியவையும் உறுதி செய்தது.

இறுதி உத்தரவு

இந்த அறக்கட்டளை தனியார் அறக்கட்டளையா, பொது அறக்கட்டளையா என்பது தான் இந்த வழக்கின் முக்கியமான கேள்வியாக இருந்து வந்தது.

இந்தநிலையில் தான் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அஜய் ரஸ்தோகி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த இடத்தை பொறுத்தமட்டில் இந்து விழாக்களில் தர்மகாரியங்களை மேற்கொள்வதற்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம் கோவில் பெயரில் வழங்கப்படவில்லை என்ற போதிலும் தர்மகாரியங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அறப்பணிக்காகவே வழங்கப்பட்டதாகவே கருத வேண்டும்.

அனுமதிக்க முடியாது

இந்த இடத்தை தானமாக வழங்கியவரின் செட்டில்மென்ட் பதிவை பார்க்கும்போது இந்து விழாக்களின் போது தர்மகாரியங்களை மேற்கொள்ளும் வகையில் பொது தொண்டு நிறுவனத்தை உருவாக்குவது தான் என்பது தெரிகிறது.

எனவே, இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய அறக்கட்டளைக்கு அனுமதி அளிக்க முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக சப்-கோர்ட்டு, மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகிய கோர்ட்டுகளில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் வெற்றி பெற்றுள்ளது.

Next Story