முதல்-மந்திரி பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்ரே சந்திப்பு


முதல்-மந்திரி பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்ரே சந்திப்பு
x
தினத்தந்தி 21 Feb 2020 12:45 PM GMT (Updated: 21 Feb 2020 12:45 PM GMT)

மராட்டிய முதல்-மந்திரியும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே டெல்லியில் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

மராட்டியத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேர்தல் முடிவை தொடர்ந்து, முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டுகள் தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. 

இதை ஏற்க பாரதீய ஜனதா மறுத்ததால் கூட்டணி உடைந்தது. இதையடுத்து பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, கொள்கையில் முரண்பட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து புதிய கூட்டணியை உருவாக்கி மராட்டியத்தில் ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இதன்மூலம் பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு இடையேயான நீண்டநாள் உறவு முடிவுக்கு வந்தது.

சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக திகழும் பாரதீய ஜனதா வேறு வழியின்றி எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது மரபு. ஆனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே டெல்லி செல்லாமல் இருந்து வந்தார்.

கடந்த டிசம்பர் 6-ந் தேதி புனே வந்த பிரதமர் மோடியை விமான நிலையம் சென்று உத்தவ் தாக்கரே வரவேற்றார். இந்த நிலையில் அவர் முதல்-மந்திரி பதவி ஏற்று 3 மாதங்கள் ஆகிய நிலையில், முதல் முறையாக இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மேலும் இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. 

இந்த சந்திப்பின் போது மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து அவர் பிரதமருடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்யா தாக்கரேவும் இச்சந்திப்பின் போது உடன் இருந்தார்.

இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, உள்துறை மந்திரிஅமித்ஷா ஆகியோரையும்  சந்தித்து பேச உத்தவ் தாக்கரே திட்டமிட்டு உள்ளார்.

Next Story