நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரிய மனு தள்ளுபடி - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்


நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரிய மனு தள்ளுபடி -  டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்
x
தினத்தந்தி 22 Feb 2020 12:34 PM GMT (Updated: 22 Feb 2020 12:34 PM GMT)

நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரிய மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளனர்.

அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு, மறுஆய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர் களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போனது. இந்தநிலையில் நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு மார்ச் 3 ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்கிடையே குற்றவாளி  வினய் சர்மாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது  தாயை கூட அடையாளம் காண இயலாத நிலையில் வினய்  சர்மா உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்  ஏ.பி.சிங், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வினய்யின் வலது கை எலும்பு முறிந்துள்ளதாகவும்  உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த மனுவை  விசாரித்த நீதிபதி தர்மேந்தர் ராணா, வினய் சர்மா குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய திகார் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.  இந்நிலையில், 

 வினய் குமார் சர்மா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தனக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மனநிலை சரியில்லாமல் இருப்பதால், உளவியல் சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறி வினய் குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நடத்திய நீதிபதி தர்மேந்தர் ராணா, குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர்சிகிச்சை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

நீதிமன்றம் தீர்ப்பு குறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி செய்தியாளர்களிடம் கூறுகையில், 

மரணதண்டனையை தாமத்தப்படுத்த குற்றவாளிகள் பயன்படுத்தும் ஒரு தந்திரம் தான் இது. குற்றவாளிகள் நீதிமன்றங்களை தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்கள் கிட்டதட்ட எல்ல சட்டதீர்வுகளை கண்டுவிட்டார்கள். மார்ச் 3-ம் தேதி குற்றவாளிகள் தூக்கிலப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

Next Story