மே 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடையை மீறினால் 3 மாதம் சிறை - மும்பை மாநகராட்சி அறிவிப்பு

ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை மே 1-ந் தேதி முதல் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றும், மீறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் மும்பை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
மும்பை,
பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முந்தைய பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி அரசு முடிவு செய்தது.
அதன்படி மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் தடை சரிவர அமல்படுத்தப்படவில்லை.
தொடக்கத்தில் அரசு காட்டிய தீவிரத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு சற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் தொடர்ந்து தீவிரமாக அமல்படுத்தாததால் பழையபடி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு புழக்கத்தில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே, “வருகிற மே 1-ந் தேதிக்குள் மராட்டியம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாறும். இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி எனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். குளிர்பானங்களின் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து மும்பை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில அரசின் அறிவிப்புக்கு இணங்க இந்த ஆண்டு மே 1-ந் தேதிக்குள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத நகரமாக மும்பையை மாற்ற மாநகராட்சி உறுதி பூண்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் தடை மே 1-ந் தேதி முதல் தீவிரமாக அமல்படுத்தப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். பொதுமக்கள், வர்த்தகர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் முதல் முறை ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை அதே நபர் பிடிபட்டால் அபராத தொகை ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
3-வது முறையும் அவர் சிக்கும் பட்சத்தில் ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 2018-ம் ஆண்டு தடை செய்யப்பட்டதில் இருந்து மும்பையில் இதுவரை 86 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.4 கோடியே 65 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story