கற்பழிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட கேரள பாதிரியார் பணிநீக்கம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் நடவடிக்கை


கற்பழிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட கேரள பாதிரியார் பணிநீக்கம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 March 2020 3:45 AM IST (Updated: 2 March 2020 2:38 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கற்பழிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியாரை பணி நீக்கம் செய்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொச்சி,

கேரளாவில் சிரோ மலபார் தேவாலய பாதிரியாராக இருந்து வந்தவர் ராபின் வடக்கும்சேரி (வயது 50).

இவர் 2016-ம் ஆண்டு, கண்ணூர் மாவட்டம், கோட்டியூரில் உள்ள தேவாலய பாதிரியார் பொறுப்பையும், ஒரு பள்ளிக்கூட நிர்வாக பொறுப்பையும் கவனித்து வந்தார்.

அப்போது அவர் தனது நிர்வாகத்தில் இயங்கிய பள்ளிக்கூடத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பல முறை பலாத்காரம் செய்து, கர்ப்பம் ஆக்கினார் என்ற புகார் எழுந்தது. அந்த சிறுமிக்கு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம், அம்பலத்துக்கு வந்ததைத் தொடர்ந்து அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராபின் வடக்கும்சேரி மீது போக்சோ சட்டப்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவர் கனடாவுக்கு தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் போலீசார் சுற்றிவளைத்து அவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தலச்சேரியில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

சிறுமிக்கு பிறந்த குழந்தையின் மரபணுவுடன், பாதிரியார் ராபினின் மரபணு ஒத்துப்போனது. இதனால் அவர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் ஆனது.

இந்த வழக்கில் அவரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி வினோத் தீர்ப்பு அளித்தார்.

இந்த நிலையில், அவரை பாதிரியார் என்ற தகுதியின் அடிப்படையில் மத ரீதியில் ஆற்றுகிற கடமை, பணிகளில் இருந்து நீக்கி போப் ஆண்டவர் பிரான்சிஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதை கத்தோலிக்க திருச்சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துகிற, பாழ்படுத்துகிற மத குருமாரை சகித்துக்கொள்ள கூடாது என்ற கொள்கையை அனைத்து பேராயர்களும் பின்பற்ற வேண்டும் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ள நிலையில், பாதிரியார் ராபின் மீது பணிநீக்க நடவடிக்கை பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story